கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை மாட்டு வண்டியில் வந்து விவசாயிகள் முற்றுகை - வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரிக்கை


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை மாட்டு வண்டியில் வந்து விவசாயிகள் முற்றுகை - வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரிக்கை
x
தினத்தந்தி 23 Sep 2020 10:45 PM GMT (Updated: 23 Sep 2020 7:03 PM GMT)

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை மாட்டு வண்டியில் வந்து விவசாயிகள் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மனு கொடுத்தனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை தேசிய விவசாயிகள் சங்கத்தினர் மாட்டு வண்டியில் வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறிஇருப்பதாவது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரம், நில உரிமை, விளை பொருட்கள் உற்பத்தி, சந்தைப்படுத்தலில் உள்ள பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. அத்துடன் பொது வினியோக திட்டம் மற்றும் வேளாண் கொள்முதல் நிலையங்கள் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

எனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திருப்ப பெற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில ஆடு வளர்ப்போர் சங்க தலைவர் கருப்பசாமி, நகர தலைவர் ராமசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story