கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2020 4:22 AM IST (Updated: 24 Sept 2020 4:22 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

மத்திய-மாநில அரசுகளை கண்டித்து நேற்று தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெரம்பலூரில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெரம்பலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாலையோர வியாபாரிகள், விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெங்கராஜ் தலைமை தாங்கினார்.

பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் மல்லீஸ்குமார் தலைமை தாங்கினார். மேற்கண்ட ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் சி.ஐ.டி.யு, தொ.மு.ச., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஊதியகுறைப்பு கூடாது

ஆர்ப்பாட்டத்தில் கொரோனா காலத்திற்கு தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும். வேலைநீக்கம், ஊதியகுறைப்பு செய்யக்கூடாது. பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்ய ஒவ்வொரு தொழிலாளியும் கட்டாயமாக செல்போன் வைத்திருந்து, அதை ஆதார் அட்டையில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை கைவிட வேண்டும்.

பொது முடக்கத்தால் வருமானம் இழந்த குடும்பங்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 500 வழங்கிட வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சட்டப்படி பதிவு செய்வதையும், அவர்களுக்குரிய ஊதியம் வழங்கப்படுவதையும் உறுதிப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதேபோல் வேப்பந்தட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச வட்ட பொறுப்பாளர் வேணுகோபால் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அரியலூர்

அரியலூர் அண்ணாசிலை அருகில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொருளாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். இதில் தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அகரம்சீகூர்

இதேபோல் அகரம்சீகூரில் சி.ஐ.டி.யு. மற்றும் தொ.மு.ச. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. தலைவர் கார்மேகம் தலைமை தாங்கினார். இதில் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மற்றும் சுமை தூக்குவோர் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் பெரம்பலூர் சர்க்கரை நுழைவுவாயில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. செயலாளர் குள்ளபெத்தான் தலைமை தாங்கினார்.

Next Story