அரியலூர் வட்டாரத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை


அரியலூர் வட்டாரத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 24 Sept 2020 4:28 AM IST (Updated: 24 Sept 2020 4:28 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் வட்டாரத்தில் மக்காச்சோள பயிரில் ஏற்பட்டுள்ள படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளப்பயிர் 16 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மக்காச்சோள பயிரில் ராணுவப் படைப்புழு பாதித்து மகசூல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானியுடன் இணைந்து மக்காச்சோள பயிர்களை ஆய்வு செய்து, அதனை கட்டுப்படுத்த ராணுவ படைப்புழு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேளாண்மை இணை இயக்குனர் பழனிசாமி மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்ரமணியன் ஆகியோருடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூச்சியியல் துறை விஞ்ஞானி சந்திசேகர் இணைந்து அரியலூர் வட்டாரத்தில் சிறுவயலூர், வாலஜா நகரம் மற்றும் திருமானூர் வட்டாரத்தில் பூண்டி மற்றும் கீழப்பழுர் கிராமத்தில் மக்காச்சோள பயிர்களை ஆய்வு மேற்கொண்டனர்.

ஆலோசனை

அரியலூர் வட்டாரத்தில் 15 முதல் 20 நாட்கள் வயதுள்ள மக்காச்சோள பயிர்களுக்கு முதல் தெளிப்பாக அசாடிராக்டின் லிட்டருக்கு 2 மில்லி அல்லது எமாமெக்டின் பென்சோயட் 10 லிட்டர் நீருக்கு 4 கிராம் வீதம் தெளிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், வரப்பு பயிராக துவரை, சோளம் மற்றும் எள் பயிரிட கேட்டுக்கொள்ளப்பட்டது. ஊடு பயிராக தட்டைப்பயிறு, சாமந்திப் பூ பயிரிடவும் அறிவுறுத்தப்பட்டது.

ராணுவ படைப்புழு அந்து பூச்சிகளை கவர இனக்கவர்ச்சிப்பொறி எக்டேருக்கு 20 வீதம் வைக்கவும், 30 முதல் 40 நாட்கள் வயதுள்ள பயிர்களுக்கு மெட்டாரைசியம் அனிசோபிலே லிட்டருக்கு 10 கிராம் தெளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது அரியலூர் வேளாண்மை உதவி இயக்குனர்(பொறுப்பு) சவிதா மற்றும் திருமானூர் துணை வேளாண்மை அலுவலர் பால்ஜான்சன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story