பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 24 Sep 2020 2:59 AM GMT (Updated: 24 Sep 2020 2:59 AM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை அவுரி திடலில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை செயலாளர் முரளி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்க மாவட்ட தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் 3 மாதங்களுக்கு ரூ.22 ஆயிரத்து 500 வழங்க வேண்டும்.

நிபந்தனைகளை கைவிட வேண்டும்

பொது முடக்க காலத்தில் ஆட்குறைப்பு, பணி நீக்கம், சம்பளம் குறைப்பு செய்வதை கைவிட வேண்டும். கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு நல வாரியங்களில் பதிவு செய்ய மற்றும் புதுப்பிக்க நடைமுறையில் இருக்கும் கடினமான நிபந்தனைகளை கைவிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவித்தபடி ரூ.310 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

வேதாரண்யம்

வேதாரண்யம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் ஐ.என்.டி.யூ.சி. சங்கத்தை சேர்ந்தவர்கள், அரசு பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்வேளூர்

மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கீழ்வேளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட தலைவர் அங்காடி சேகர் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. பொறுப்பாளர் வசந்தி, ஏ.ஐ.டி.யூ.சி. பொருளாளர் அம்பேத்கார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மகேந்திரன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி.யை சேர்ந்த பக்கிரிசாமி, முருகையன், சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க நிர்வாகி மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Next Story