தஞ்சை, நாகையில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி டெல்டாவில் 331 பேருக்கு தொற்று


தஞ்சை, நாகையில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி டெல்டாவில் 331 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 24 Sep 2020 3:32 AM GMT (Updated: 24 Sep 2020 3:32 AM GMT)

தஞ்சை, நாகையில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலியானார்கள். டெல்டாவில் 331 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 836 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 138 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 419 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,260 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 82 வயது ஆண், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 79 வயது ஆண், 75 வயது ஆண், 51 வயது ஆண், 50 வயது ஆண் ஆகிய 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 157 பேர் பலியாகி உள்ளனர்.

நாகை

நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 860 ஆக இருந்தது. நேற்று 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது. நாகை அருகே வடு கச்சேரியை சேர்ந்த 62 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதன்மூலம் நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 409 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 68 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

இதன்மூலம் மாவட்டத்தில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது. தற்போது திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட மருத்துவமனைகளில் 874 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story