மண்எண்ணெய் பதுக்கல் ரேஷன்கடை பெண் ஊழியர் பணி இடைநீக்கம் - பொதுமக்கள் புகாரின்பேரில் அதிகாரி நடவடிக்கை


மண்எண்ணெய் பதுக்கல் ரேஷன்கடை பெண் ஊழியர் பணி இடைநீக்கம் - பொதுமக்கள் புகாரின்பேரில் அதிகாரி நடவடிக்கை
x
தினத்தந்தி 25 Sept 2020 4:15 AM IST (Updated: 25 Sept 2020 3:54 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே ரேஷன் கடையில் மண்எண்ணெய் பதுக்கியதாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் பெண் ஊழியர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டார்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சி.பி. இளங்கோ உள்ளிட்டோர் பட்டரமங்கலம் அருகே நேற்று மாலை காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ரேஷன் கடை அருகே சென்றபோது ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டிருந்தனர். உடனே அவர்கள் ஊராட்சி ஒன்றிய தலைவரின் காரை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவர் காரில் இருந்து இறங்கினார். அவரிடம் பொதுமக்கள் , ‘இந்த ரேஷன் கடையில் இன்று (அதாவது நேற்று) காலையில் அனைவருக்கும் மண்எண்ணெய் வினியோகம் செய்தார்கள். இப்போது கேட்டால் இருப்பு இல்லை என்று கூறுகிறார்கள். முறையாக எங்களுக்கு அரிசி, பருப்பு, மண்எண்ணெய் வினியோகம் செய்யப்படுவதில்லை’ என்று புகார் தெரிவித்தனர். அதன்பின்னர் அவர் புதுப்பீர்கடவு ஊராட்சி தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் கவிதா செல்வம் ஆகியோரை அழைத்துக்கொண்டு பொதுமக்களுடன் ரேஷன் கடைக்கு சென்றார்.

அதைத்தொடர்ந்து அவர்கள் ரேஷன் கடையில் பணியில் இருந்த பெண் ஊழியரிடம் பொதுமக்கள் புகார் குறித்து கேட்டனர். அதற்கு அந்த பெண் ஊழியர், ‘ரேஷன் பொருட்களை எல்லாம் நாங்கள் முறையாக தான் பொதுமக்களுக்கு வினியோகம் செய்கிறோம். தற்போது ரேஷன் கடையில் மண்எண்ணெய் இருப்பு இல்லை. காலியாகிவிட்டது’ என்றார். இதனால் சந்தேகம் அடைந்த ஊராட்சி ஒன்றிய தலைவர் ரேஷன் கடையை கண்காணித்தபோது கட்டிடத்தின் பின்புறம் 10 லிட்டர் கொண்ட ஒரு மண்எண்ணெய் கேனும், 5 லிட்டர் கொண்ட 2 மண்எண்ணெய் கேன்களும் சாக்குப்பையை கொண்டு மூடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைப்பார்த்த பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய தலைவரிடம் , ‘இவ்வாறு மண்எண்ணெய் கேன்களை பதுக்கி வைத்து வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதற்கு நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். உடனே ஊராட்சி ஒன்றிய தலைவர் இது சம்பந்தமாக கூட்டுறவு சங்க மேல் அதிகாரி சி.எஸ்.ஆர்.மோகன்ராஜுக்கு தகவல் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து சங்க அதிகாரி அங்கு விரைந்து வந்து ரேஷன் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மண்எண்ணெய் கேன்களை கைப்பற்றினார். மேலும் இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதையடுத்து மண்எண்ணெய் பதுக்கி வைத்ததாக பெண் ஊழியர் ஆஸ்மா (வயது 40) என்பவரை உடனே பணிஇடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுபற்றி சங்க அதிகாரி சி.எஸ்.மோகன்ராஜ் கூறும்போது, ‘இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்யப்படும். அந்த புகாரின் பேரில் அவர் விசாரணை நடத்தி மேல்நடவடிக்கை எடுப்பார்’ என்றார்.

Next Story