மனைவி, மாமியார் கழுத்தறுத்து படுகொலை குழந்தையுடன் தலைமறைவான வாலிபருக்கு வலைவீச்சு


மனைவி, மாமியார் கழுத்தறுத்து படுகொலை குழந்தையுடன் தலைமறைவான வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Sept 2020 7:50 AM IST (Updated: 25 Sept 2020 7:50 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் மனைவி, மாமியாரை கழுத்தறுத்து படுகொலை செய்துவிட்டு குழந்தையுடன் தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருச்சி,

பெரம்பலூரை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 35). இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு 3 வயதில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. உலகநாதன் டயர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். தற்போது அவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்துள்ளார். பவித்ரா டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வுக்கு திருச்சியில் உள்ள ஒரு தனியார் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு இவர்கள், திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர்தெருவில் ஒத்திக்கு வீடு பார்த்து குடி வந்துள்ளனர். பவித்ரா எப்படியாவது அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்புடன் படித்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு பவித்ராவின் தாயார் கலைச்செல்வி தனது மகள் மற்றும் பேத்தியை பார்ப்பதற்காக பெரிய மிளகுபாறையில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.

கழுத்து அறுத்து படுகொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த உலகநாதன் கத்தியால் பவித்ராவையும், அதை தடுக்கச்சென்ற மாமியார் கலைச்செல்வியையும் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். பின்னர் அதிகாலை 4 மணி அளவில் குழந்தை கனிஷ்காவை தூக்கி கொண்டு வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டுபோட்டு பூட்டி விட்டு சென்று விட்டார்.

நேற்று மாலை உலகநாதனின் தாயார் இந்திராணி பவித்ராவை செல்போனில் தொடர்பு கொண்டார். நீண்ட நேரமாக அவர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்களிடம் செல்போனில் பேசி வீட்டை திறந்து பார்க்கும் படி கூறியுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, அங்கு பவித்ரா மற்றும் அவரது தாய் கலைச்செல்வி கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

போலீசார் விசாரணை

இதைக்கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி, உதவி கமிஷனர் தமிழ்மாறன், இன்ஸ்பெக்டர்கள் விக்டர், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். துப்பறியும் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதிகாலை 4 மணியளவில் உலகநாதன் குழந்தையுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றதை பார்த்ததாக தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையுடன் தலைமறைவான உலகநாதனை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். திருச்சியில் மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்துவிட்டு வாலிபர் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story