கும்பகோணத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் 50 பேர் கைது


கும்பகோணத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் 50 பேர் கைது
x
தினத்தந்தி 25 Sep 2020 2:48 AM GMT (Updated: 25 Sep 2020 2:48 AM GMT)

கும்பகோணத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்பகோணம்,

கும்பகோணத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏரகரம் சாமிநாதன் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் சின்னதுரை, வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயலாளர் சுவாமிமலை விமலநாதன், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார். இதில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தேங்காய் உடைப்பு

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் நெற்பயிர்கள் மற்றும் கருப்புக்கொடி ஏந்தி இருந்தனர். முன்னதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை வாபஸ் பெற வேண்டி பிள்ளையார் கோவில் முன்பு தேங்காய் உடைக்கப்பட்டது. முடிவில் பட்டீஸ்வரம் புவனேஸ்வரி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மசோதாக்களை ஏற்க கூடாது என்பதை வலியுறுத்தி ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த்துக்கு தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

நகல் எரிப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக்குழுவின் சார்பில் மசோதா நகலை எரிக்கும் போராட்டம் கும்பகோணம் உச்சிப்பிள்ளையார்கோவில் பகுதியில் நேற்று நடந்தது. இதில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன் தலைமை தாங்கினார்.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஷாஜகான், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் செல்வம், தமிழ் தேசிய பேரியக்க மாநில செயற்குழு உறுப்பினர் விடுதலை சுடர், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக முன்னாள் மாவட்ட தலைவர் சல்லி நசீர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் யாசர் அராபத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

50 பேர் கைது

போராட்டத்தின்போது மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்ட மசோதாக்களின் நகல்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது. போராட்டம் காரணமாக அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கும்பகோணம் மேற்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 50 பேரை கைது செய்தனர்.

அய்யம்பேட்டை

அய்யம்பேட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வேளாண் சட்ட மசோதா நகல்களை கிழித்து எறியும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலாளர் முகமது பசீர் தலைமை தாங்கினார். எஸ்.டி.டி.யூ. தொழிற் சங்கத்தின் மாநில தலைவர் முகமது பாரூக் அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டத்தை கண்டித்து பேசினார். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விவசாய சட்ட நகல்களை கிழித்து எறிந்தனர். பின்னர் இந்த சட்டங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட துணைத் தலைவர் ரியாஸ்அகமது, முன்னாள் மாவட்ட துணை தலைவர் முகமது சரிப், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நகர தலைவர் அபுதாகீர் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story