கன்னியாகுமரி அருகே பேரிடர் மீட்பு ஒத்திகை: குளத்தில் தத்தளித்த 5 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர்


கன்னியாகுமரி அருகே பேரிடர் மீட்பு ஒத்திகை: குளத்தில் தத்தளித்த 5 பேரை தீயணைப்பு படையினர் மீட்டனர்
x
தினத்தந்தி 25 Sept 2020 8:44 AM IST (Updated: 25 Sept 2020 8:44 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி அருகே நடந்த பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியின் போது நரிக்குளத்தில் தத்தளித்த 5 பேரை தீயணைப்பு படையினர் தத்ரூபமாக மீட்பது போல் நடித்து காட்டினர்.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து குளங்களும் நிரம்பி வருகின்றன. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு வெள்ள அபாய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மழை போன்ற பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்பது எப்படி? இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது எப்படி? என்பது சம்பந்தமான பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தும்படி வருவாய்த்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டார்.

மீட்பு ஒத்திகை

அதன்படி மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு அறிவுரையின் பேரில் கன்னியாகுமரி அருகே உள்ள பஞ்சலிங்கபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மகாதானபுரத்தில் உள்ள நரிக்குளத்தில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல் மன்னான், பஞ்சலிங்கபுரம் பஞ்சாயத்து தலைவர் சிந்து செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

25 ஆடி ஆழம் உள்ள இந்த குளத்தில் தற்போது தண்ணீர் அதிக அளவில் உள்ளது. இந்த குளத்தில் நேற்று காலை 5 பேர் தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர்கள் வெங்கட சுப்பிரமணியன், ஜீவா (போக்குவரத்து) ஆகியோர் தலைமையில் தீயணைக்கும்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இவர்களுக்கு உதவியாக நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமையில் தீயணைக்கும்படை வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மோட்டார் பொருத்திய மீட்பு ரப்பர் படகு மூலமும், ரப்பர் டியூப் மிதவைகள் மூலமும் குளத்தில் தத்தளித்த 5 பேரையும் உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

முதலுதவி

பின்னர் கரையில் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை காண திரண்டிருந்த அந்த பகுதி பொதுமக்கள் இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்தனர். குளத்தில் சிக்கி தவித்தவர்கள் யார்? என்று விசாரித்தனர். அப்போது தான் அது பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி என்று பொதுமக்களுக்கு தெரிய வந்தது.

இதில் தண்ணீரில் தத்தளித்தது போல தத்ரூபமாக நடித்தவர்களும் தீயணைப்பு வீரர்கள் என்பது தெரியவந்தது. நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், சுகாதார அதிகாரி முருகன், கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் செய்யது இப்ராகிம், சுசீந்திரம் வருவாய் ஆய்வாளர் ஜாக்குலின், லீபுரம் கிராம நிர்வாக அதிகாரி மகாதேவன்பிள்ளை, பஞ்சலிங்கபுரம் குலசேகர சுடலைமாடசாமி கோவில் நிர்வாக குழுதலைவர் வேலையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story