குளச்சலில் போக்குவரத்து விதிகளை மீறிய 106 பேர் மீது வழக்கு சட்டையில் பொருத்திய கேமராவுடன் போலீசார் வாகன சோதனை


குளச்சலில் போக்குவரத்து விதிகளை மீறிய 106 பேர் மீது வழக்கு சட்டையில் பொருத்திய கேமராவுடன் போலீசார் வாகன சோதனை
x
தினத்தந்தி 25 Sep 2020 3:19 AM GMT (Updated: 25 Sep 2020 3:19 AM GMT)

குளச்சல் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 106 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சட்டையில் பொருத்திய கேமராவுடன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

குளச்சல்,

கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து விதிகளை மீறும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இந்தநிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் வாகன சோதனையை தீவிரப்படுத்த குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உத்தரவிட்டார். அதன்பேரில் குளச்சல் சப்-டிவிஷனில் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரியின் மேற்பார்வையில் குளச்சல் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் நேற்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல், லைசென்ஸ் இல்லாமல், காரில் சீட் பெல்ட் அணியாமல் என போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டி வந்த 106 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

சட்டையில் கேமரா...

வாகன சோதனையின் போது போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க நவீன கேமரா போலீசாருக்கு வழங்கப்பட்டது. அதன்படி குளச்சலில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் சட்டையில் நவீன கேமராவை பொருத்தி இருந்தார். வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து விட்டு பிரச்சினையை திசை திருப்புவதால், நடக்கும் சம்பவங்களை அப்படியே படம் பிடித்து வைத்துக்கொள்ள இந்த கேமரா உதவியாக இருக்கும். இந்த வாகன சோதனை நேற்று இரவு வரை நீடித்தது. இதேபோல் தக்கலை, நாகர்கோவில், கன்னியாகுமரி என அனைத்து போக்குவரத்து போலீசாருக்கும் சட்டையில் பொருத்தும் கேமரா வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கேமராக்களை வாகன சோதனையின் போது போலீசார் பயன்படுத்தி வருகிறார்கள்.

Next Story