நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் டீக்கடைக்காரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் டீக்கடைக்காரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Sept 2020 4:45 AM IST (Updated: 26 Sept 2020 1:04 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் டீக்கடைக்காரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோட்டைவிளைபட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 45). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது முன்னோர்களின் கல்லறைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தன்னுடைய குடும்பத்தினருடன் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார்.

கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகில் சென்றபோது, கணேசன் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணெயை திடீரென்று தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்த போலீசாரும், கணேசனின் குடும்பத்தினரும் மண்எண்ணெய் கேனை பிடுங்கி, கணேசன் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் கணேசனிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கணேசன், கலெக்டர் அலுவலகத்தில் சென்று மனு வழங்கினார்.

பின்னர் கணேசன் கூறுகையில், “எனது நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முன்னோர்களின் கல்லறைகள் உள்ளன. அதில் நாங்கள் வழிபாடு நடத்தி வருகிறோம். இந்த நிலையில் அங்குள்ள கல்லறைகளை சிலர் உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து போலீசாரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக எதிர்தரப்பினருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகிறார்கள். எங்களையும் மிரட்டுகிறார்கள். இதனால்தான் நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றேன்“ என்றார்.

இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதாக, கணேசன் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் டீக்கடைக்காரர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story