ஜெயங்கொண்டத்தில், விவசாயிகள் சாலை மறியல்; போலீசாருடன் தள்ளு-முள்ளு - 30 பேர் கைது
ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மகாராசன், விவசாயிகள் தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர்.
இந்நிலையில் திடீரென விவசாயிகள் நான்குரோட்டிற்கு சென்று மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் நான்கு ரோடு அருகே ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது மாதர் சங்க மாவட்ட தலைவர் பத்மாவதி, திடீரென போலீசாரை தள்ளிவிட்டு ஓடிச்சென்று 4 ரோட்டில் நின்றுகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எற்பட்டது.
இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story