மனைவி-மாமியார் கொலை வழக்கில் திருப்பம்: பெரம்பலூர் நண்பரிடம் ரகசிய இடத்தில் போலீசார் விசாரணை


மனைவி-மாமியார் கொலை வழக்கில் திருப்பம்: பெரம்பலூர் நண்பரிடம் ரகசிய இடத்தில் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 27 Sept 2020 5:29 PM IST (Updated: 27 Sept 2020 5:29 PM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் மனைவி, மாமியார் கொலை வழக்கில் பெரம்பலூரை சேர்ந்த நண்பரை பிடித்து தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கணவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

திருச்சி,

திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 30). இவரது மனைவி பவித்ரா (27), பி.எஸ்சி. பட்டதாரி. இவர்களது மகள் கனிஷ்கா (3). இவர்களை பார்க்க பவித்ராவின் தாய் கலைச்செல்வி (45) கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி பெரிய மிளகுபாறை வந்திருந்தார்.

கடந்த 23-ந் தேதி இரவு முதல் உலகநாதன் வீடு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் மறுநாள் ஜன்னல் வழியாக பார்க்கையில் பவித்ராவும், அவரது தாய் கலைச்செல்வியும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.

கோர்ட்டில் சரண்

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி, மாமியாரை கழுத்தை அறுத்து கொன்று விட்டு மகளுடன் உலகநாதன் மாயமானது தெரியவந்தது. இதனால் 3 தனிப்படை அமைத்து உலகநாதனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கும்பகோணம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்: 1 கோர்ட்டில் உலகநாதன் சரணடைந்தார்.

மாஜிஸ்திரேட்டு தரணிதர், அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து தஞ்சாவூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். சரணடையும் முன் உலகநாதன், தனது மகள் கனிஷ்காவை கும்பகோணத்தில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டில் ஒப்படைத்ததாக தெரிகிறது.

நண்பரிடம் ரகசிய இடத்தில் விசாரணை

இதைத்தொடர்ந்து உலகநாதனின் நண்பரான பெரம்பலூரை சேர்ந்த சர்மாவை தனிப்படை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதலால் இந்த கொலை நடந்துள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பட்டப்படிப்பு படித்துள்ள பவித்ரா, அரசு வேலைக்காக பல்வேறு பயிற்சி பள்ளிகளுக்கு சென்று வந்தார்.

பலமணி நேரமாக செல்போனில் பேசி கொண்டே இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து மனைவிடம் உலகநாதன் சண்டை போட்டு கொண்டிருந்துள்ளார். சம்பவத்துக்கு முதல்நாள் மகள் வீட்டில் கலைச்செல்வியை விட்டு விட்டு அவரது கணவர் செல்லத்துரை சென்னை சென்றுவிட்டார். இதனால் அவர் உயிர் தப்பினார்.

கொலை நடந்த அன்று சர்மா, உலகநாதனை திருச்சி வந்து அழைத்து சென்றுள்ளார். இதனால் சர்மாவிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் உலகநாதனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க செசன்ஸ் கோர்ட்டு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக திருச்சி கோர்ட்டில் நாளை (திங்கட்கிழமை) போலீசார், மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

Next Story