கொரோனா கணக்கெடுப்பு செய்வது போல் நடித்து பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிக்க முயற்சி 2 பேர் கைது


கொரோனா கணக்கெடுப்பு செய்வது போல் நடித்து பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிக்க முயற்சி 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Sept 2020 8:03 PM IST (Updated: 27 Sept 2020 8:03 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா கணக்கெடுப்பு பணி செய்வது போல் நடித்து திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிக்க முயன்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் ஆண்டிபாளையம் சின்னியகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சாந்தாமணி (வயது 45). இவர் கடந்த 22-ந் தேதி மாலை 4 மணி அளவில் வீட்டில் இருந்தபோது 35 வயது பெண் ஒருவர், தான் அங்கன்வாடி ஊழியர் எனவும், கொரோனா கணக்கெடுப்பு பணிக்கு வந்ததாகவும் கூறி ஆதார் விவரங்களை சாந்தாமணியிடம் கேட்டார். பின்னர் வீட்டில் யாரெல்லாம் உள்ளார்கள் என்ற விவரத்தையும் கேட்டு சென்றார்.

இதைத்தொடர்ந்து மறுநாள் மாலை 4 மணி அளவில் அந்த பெண், 25 வயது வாலிபருடன் சாந்தாமணி வீட்டுக்கு வந்தார். அந்த வாலிபர், தான் பகுதி நேர ரேஷன் கடை ஊழியர் எனவும், ஆதார் கார்டு விவரங்களை சேகரிப்பதற்காக வந்துள்ளதாகவும், சாந்தாமணியிடம் கூறினார்.

நகை பறிக்க முயற்சி

சாந்தாமணி வீட்டில் தனியாக இருப்பது தெரிந்ததும் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அவர் தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்ற நேரத்தில் அந்த வாலிபரும், அந்தப் பெண்ணும் வீட்டுக்குள் சென்று சாந்தாமணியின் வாயை பொத்தி, கத்தியால் குத்தி நகையை பறிக்க முயன்று உள்ளனர். அதற்குள் சாந்தாமணி சத்தம் போட கத்தியால் சாந்தாமணியின் கைவிரல்களை குத்தி காயப்படுத்தியதாக தெரிகிறது.

சாந்தாமணியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர். அதற்குள் அந்த வாலிபரும், அந்த பெண்ணும் மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் சாந்தாமணியின் இடது கையில் காயம் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து சாந்தாமணி அளித்த புகாரின் பேரில் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

தனிப்படை

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்படி துணை கமிஷனர் சுரேஷ்குமார் கண்காணிப்பில் உதவி கமிஷனர் நவீன்குமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் வரதராஜன், குமரகுரு, ரமேஷ், மயில்சாமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் கே.வி.ஆர். நகர் கொடிக்கம்பம் பகுதியைச் சேர்ந்த சத்யபிரியா (35), பாளையக்காடு குழந்தையப்பா நகரைச் சேர்ந்த மனோஜ்குமார் (24) ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை நோட்டமிட்டு இவர்கள் நகை பறிக்க முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சத்யபிரியா, மனோஜ்குமார் இருவரையும் போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். துரிதமாக விசாரணை மேற்கொண்டு இரண்டு பேரை கைது செய்த தனிப்படையினரை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.

Next Story