கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் சாவு பெண்கள் உள்பட 70 பேருக்கு தொற்று


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் சாவு பெண்கள் உள்பட 70 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 27 Sep 2020 3:32 PM GMT (Updated: 27 Sep 2020 3:32 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் இறந்தார். நேற்று ஒரே நாளில் பெண்கள் உள்பட 70 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்தவர் 68 வயது முதியவர் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த முதியவர் இறந்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.

70 பேருக்கு தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் 50-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 70 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. கிருஷ்ணகிரி, ஓசூர், காவேரிப்பட்டணம், பர்கூர், சாமல்பட்டி, மருதேரி, சூளகிரி, ஜெகதேவி, வலசகவுண்டனூர், ராயக்கோட்டை உள்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று வரையில் மொத்தம் 4 ஆயிரத்து 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 ஆயிரத்து 371 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 829 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

Next Story