வாணியம்பாடியில் கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி


வாணியம்பாடியில் கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி
x
தினத்தந்தி 28 Sep 2020 6:07 AM GMT (Updated: 28 Sep 2020 6:07 AM GMT)

வாணியம்பாடியில் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலியானார். அவருக்கு போலீஸ் சூப்பிரண்டு அஞ்சலி செலுத்தினார்.

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சண்முகம் (வயது 51). இவருக்கு திலகவதி என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். சண்முகம் கடந்த 12-ந் தேதி முதல் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து கடந்த 24-ந் தேதி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அவர் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

போலீஸ் சூப்பிரண்டு அஞ்சலி

தகவல் அறிந்தவுடன் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் விஜயகுமார் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து பாதுகாப்பு கவச உடை அணிந்து பிரேத பரிசோதனை அறைக்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனிசெல்வம், சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் சண்முகத்தின் குடும்பத்தினருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஆறுதல் கூறினர். அப்போது அவரது மனைவி திலகவதி உயர் அதிகாரிகளுக்கு தனது கணவர் எப்போதும் மரியாதையுடன் இருப்பார் என்பதற்கு சான்றாக போலீஸ் சூப்பிரண்டுக்கு தனது சல்யூட்டை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ‘சல்யூட்’ அடித்தார். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story