வேலூர் மாவட்டம் முழுவதும் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 142 பேருக்கு கொரோனா


வேலூர் மாவட்டம் முழுவதும் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 142 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 Sep 2020 6:10 AM GMT (Updated: 28 Sep 2020 6:10 AM GMT)

வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 142 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 621 ஆக உயர்ந்தது.

வேலூர்,

வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. அதில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட 15-க்கும் மேற்பட்டோருக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டது. அதன் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது.

அதில், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 2 பேரின் குடும்பத்தினர், உடன் பணிபுரிந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

13,267 பேர் குணமடைந்துள்ளனர்

வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் நர்சுகள், ஊழியர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதேபோல் வேலூரில் உள்ள விடுதியில் தங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 வடமாநிலத்தைச் சேர்ந்த நோயாளிகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதைத்தவிர தொரப்பாடியில் 9 வயது சிறுமி, பாகாயத்தில் 11 வயது சிறுமி, காகிதப்பட்டறையில் 75 வயது மூதாட்டி, சத்துவாச்சாரி பகுதியில் 7 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் ஒரேநாளில் 142 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 142 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 621 ஆக உயர்ந்தது. 13 ஆயிரத்து 267 பேர் சிகிக்சைக்கு பின்னர் வீடு திரும்பி உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story