விழுப்புரம்-புதுச்சேரி-கடலூர் நகரங்களை இணைக்கும் இ.சி.ஆர். 4 வழிச்சாலை மத்திய அரசு ஒப்புதல்- விரைவில் பணிகள் தொடக்கம்


விழுப்புரம்-புதுச்சேரி-கடலூர் நகரங்களை இணைக்கும் இ.சி.ஆர். 4 வழிச்சாலை மத்திய அரசு ஒப்புதல்- விரைவில் பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 29 Sep 2020 12:51 AM GMT (Updated: 29 Sep 2020 12:51 AM GMT)

இ.சி.ஆர். எனப்படும் கிழக்கு கடற்கரை சாலை என்றாலே மிகவும் பிரபலமானது. புதுச்சேரி முதல் சென்னை வரை இந்த சாலையில் பயணிப்பது என்றாலே சுற்றுலா பயணிகளுக்கு அலாதி பிரியம்.

வாகன நெரிசல் மிகுந்த நகரப் பகுதியை தாண்டியதும் கடலை ரசித்தபடி பயணம் செய்யலாம் என்பது தான் அதன் சிறப்பு. கோடை காலத்தில் இதமான கடல் காற்று தாலாட்டியபடி பயணிக்கலாம்.

சாலையின் இருமருங்கிலும் பச்சைப்பசேலென அழகிய மரங்கள் ரம்மியமாக காட்சி அளிக்கும். இந்த சாலையை நாளொன்றுக்கு 10 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. அதேநேரத்தில் அதிக எண்ணிக்கையில் வளைவுகளையும் கொண்டதாக இந்த சாலை உள்ளது. புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வழியாக சென்னைக்கு 4 வழிப்பாதை (பை-பாஸ்) அமைக்கப்பட்டதில் இருந்து இ.சி.ஆர். சாலையின் மவுசு குறைந்துவிட்டது என்றே கூறலாம். ஏனெனில் போக்குவரத்து நெருக்கடியின்றி எளிதில் சென்னைக்கு சென்று விடலாம். விபத்து மற்றும் உயிரிழப்பு குறைவு என்பதால் பை-பாஸ் சாலையை பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுக்க தொடங்கினார்கள்.

முதலில் போட்ட திட்டம்

இத்தகைய சூழ்நிலையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரை வழியாக 4 வழிப்பாதை அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. அதில் விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரையிலான பணிகளுக்கு ஏற்கனவே ஒப்புதல் கிடைத்துள்ளது.

இந்த சாலையானது விழுப்புரத்தில் இருந்து புதுவை மதகடிப்பட்டு திருபுவனை வழியாக கண்டமங்கலம், நவமால்காப்பேர் திரவுபதி அம்மன்கோவில் பின்புறம் வழியாக கடலூர் நோக்கிச் செல்கிறது.

ஏற்கனவே கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் வரை 4 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு மத்திய அரசினால் ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 61.4 கி.மீ. நீளமுள்ள அந்த சாலை ரூ.1,209 கோடியில் 4 வழிச்சாலையாக மாற்றப் படுகிறது. மரக்காணத்தில் இருந்து புதுச்சேரி காலாப்பட்டு வழியாக வந்து ஆரோவில், ஊசுடு ஏரி பகுதி வழியாக வில்லியனூர் சங்கராபரணி ஆற்றுபாலம் வழியாக நவமால்காப்பேர் பகுதியில் விழுப்புரத்தில் இருந்து வரும் 4 வழிப்பாதையுடன் இணைப்பதாக முதலில் திட்டம் தீட்டப்பட்டது.

நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சினை

ஆனால் புதுவை பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சினைகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து மரக்காணம் அனுமந்தையில் தொடங்கி, மாத்தூர், ஆரோவில், பொம்மையார்பாளையம், மொரட்டாண்டி, பட்டானூர், பெரம்பை, பள்ளித்தென்னல் வழியாக சென்று புதுச்சேரி-விழுப்புரம் 4 வழிச்சாலையில் இணைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அப்போது விழுப்புரம் மாவட்ட கலெக்டராக இருந்த சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்தார். மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி நிலத்தை கையகப்படுத்துவதற்கும் ஆய்வு செய்தார். ஆனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்கள் நிலத்துக்கும், குடியிருப்புகளுக்கும் பாதிப்பு வரும் என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில்தான் 4 வழிச்சாலை அமைக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

இந்த சாலை சர்வதேச நகரான ஆரோவில் பகுதியில் வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாடுபட்டு உருவாக்கிய சர்வதேச நகரின் தனித்தன்மையை காக்கவேண்டும் என்று ஆரோவில் நிர்வாகம் மற்றும் ஆரண்யா வன நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதேபோல் பறவைகள் சரணாலயமான ஊசுடு பகுதிக்கும் தொந்தரவு ஏற்படும் என்றும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

4 வழி பை-பாஸ் சாலை

இந்த பாதைக்கு பதிலாக அனுமந்தை பகுதியில் இருந்து ஒழிந்தியாப்பட்டு, சேதராப்பட்டு வழியாக ஊசுடு ஏரியின் மேற்குபகுதி வழியாக 4 வழிச்சாலை அமைக்கலாம். அதனால் பாதிப்பு ஏற்படாது. தொழில் வளர்ச்சி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த கருத்து ஏற்கப்பட்டதாக தெரியவில்லை.

இந்தநிலையில் விழுப்புரம்-புதுச்சேரி-கடலூர் நகரங்களை இணைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 67 கி.மீ. தூரத்தை 4 வழி பை-பாஸ் சாலையாக மாற்ற ரூ.1,876 கோடி திட்டத்தை தீட்டியுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் 17 பாலங்கள், 9 மேம்பாலங்கள், ஒரு பரிமாற்ற சாலை போன்றவை அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டம் ஊசுடு பறவைகள் சரணாலயத்துக்கு வெளியே அமைக்கப்படும் என்றும் இந்த திட்டத்துக்காக வெட்டப்படும் 6 ஆயிரம் மரங்களுக்கு பதிலாக அரசு விதிகளின்படி ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக தலா 10 மரங்கள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வேறு எந்த திசை திருப்பலும் இல்லை என்றும் நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது. எனவே திட்டமிட்டபடி கிழக்கு கடற்கரை சாலையில் அமையும் 4 வழிச்சாலை விழுப்புரம்-நாகப்பட்டினம், 4 வழிச்சாலையில் நவமால்காப்பேர், திரவுபதி அம்மன் கோவில் அருகே இணைக்கப்பட உள்ளது.

இ.சி.ஆர். 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு அதிரடி காட்டுமா?
புதுவையில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை காரணமாக பல்வேறு திட்டங்கள் கையைவிட்டு போகும் நிலைமை உள்ளது. குறிப்பாக புதுச்சேரி-கடலூர் சாலை விரிவாக்கப் பணிகள் முடங்கிப் போகும் சூழலே உள்ளது. தற்போது புதுவை-திண்டிவனம் சாலை இந்திரா காந்தி சிலை வரை அகலப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் நிலத்தை கையகப்படுத்த முடியாததால் புதுவை எல்லையோடு 4 வழிச்சாலை நின்றுவிட்டது. இதேபோல் போக்கு வரத்து நெருக்கடி அதிகமாக உள்ள மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் பாலம் வரை சாலையை விரிவு படுத்த முடியாமல் சிக்கல் இருந்து வருகிறது.

சாலை போக்குவரத்தில் விபத்துகளால் உயிர்ப்பலிகள் ஏற்படுவதை தவிர்க்க சாலை விரிவாக்கம் உள்ளிட்ட மாற்று திட்டங்களை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் புதுவை அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

புதுவையை சேர்ந்தவர்களுக்கு வரப்பிரசாதம்

புதுச்சேரியை சேர்ந்தவர்களில் அதிகம் பேர் சென்னையில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பலர் தினந்தோறும் சென்னைக்கு சென்று வருபவர்கள் ஆவார்கள். இவர்களால் இ.சி.ஆர். சாலை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் இ.சி.ஆரில் புதிதாக 4 வழிச்சாலை அமைக்கப்படுவது இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

அதாவது புதுச்சேரி-சென்னை இடையே கிழக்கு கடற்கரை சாலையில் பயண நேரம் வெகுவாக குறையும். உத்தேசமாக 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி விபத்தில்லா பயணத்துக்கும் வழி ஏற்படும் என்பதே அதற்கு காரணம்.

இந்த சாலை நாகப்பட்டினம் வரை செல்வதால் புதுச்சேரி மக்கள் காரைக்காலுக்கும் விரைவாக செல்வதற்கு வழி பிறந்துள்ளது.

இந்த திட்டம் ஒரு கனவு திட்டம் என்றாலும் புதுவை மக்களுக்கு அது முழு அளவில் பயனளிக்குமா? என்று தெரியவில்லை. ஏனெனில் காரைக்கால் செல்பவர்கள் கண்டமங்கலம் வரை சென்று பை-பாஸ் சாலையை பிடித்துச் செல்வார்களா? என்பது சந்தேகமே. ஏனெனில் கண்டமங்கலம் செல்வதற்குள் கடலூருக்கு சென்றுவிடலாம் என்று நினைப்பவர்களும் உள்ளனர்.

Next Story