8 நாட்களில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்தது


8 நாட்களில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்தது
x
தினத்தந்தி 30 Sept 2020 5:45 AM IST (Updated: 30 Sept 2020 1:14 AM IST)
t-max-icont-min-icon

8 நாட்களில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 6 அடி உயர்ந்தது.

ஊத்துக்கோட்டை,

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த 18-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 20-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கும், 21-ந்தேதி பூண்டி எரிக்கும் சென்றடைந்தது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். கடந்த 21-ந் தேதி பூண்டி ஏரியில் நீர் மட்டம் 17 அடியாக பதிவானது. 109 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருந்தது. கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு ஏரியின் நீர் மட்டம் 23.03 அடியாக பதிவானது. அதாவது கடந்த 21-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு வரை 8 நாட்களில் நீர் மட்டம் 6 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஏரியில் 582 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 734 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 15 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். நேற்று காலை 6 மணி நிலவரப்படி 47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அங்கிருந்து பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் ஜீரோ பாயிண்டிற்கு வினாடிக்கு 780 கன அடியாக வந்து கொண்டிருந்தது. கண்டலேறு அணையில் போதிய நீர் இருப்பில் உள்ளதால் பூண்டி ஏரிக்கு தேவையான அளவு தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளதாக ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story