அதிகாரிகள் பேச்சுவார்த்தை: குளித்தலை நுண் உர செயலாக்க மையத்திற்கு பூட்டு போடும் போராட்டம் ‘வாபஸ்’


அதிகாரிகள் பேச்சுவார்த்தை: குளித்தலை நுண் உர செயலாக்க மையத்திற்கு பூட்டு போடும் போராட்டம்  ‘வாபஸ்’
x
தினத்தந்தி 30 Sep 2020 5:55 AM GMT (Updated: 30 Sep 2020 5:55 AM GMT)

அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையின்பேரில், குளித்தலை நுண் உர செயலாக்க மையத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தை பொதுமக்கள் தற்காலிகமாக ‘வாபஸ்’ பெற்றனர்.

குளித்தலை,

குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தை இடமாற்றம் செய்து, குடியிருப்புகள் அல்லாத வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தி விட்டனர். ஆனால், இதுதொடர்பாக இதுவரை எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இந்தநிலையில், அந்த நுண் உர செயலாக்க மையத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப் போவதாக பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள்-மாணவர்கள் கூட்டமைப்பினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் நேற்று பெரியார் நகரில் உள்ள நுண் உர செயலாக்க மையத்திற்கு பூட்டு போடுவதற்காக தயாரானார்கள்.

நுண் உர செயலாக்க மையத்திற்கு பூட்டு போடாமல் தடுக்கும்பொருட்டு போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னதாகவே சம்பவ இடத்திற்கு வந்திருந்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர், குளித்தலை நகராட்சி ஆணையர் முத்துக்குமார் போராட்டத்தில் ஈடுபட இருந்தவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

இதனையடுத்து அனைவரும் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் பெரியார் நகர் பகுதியில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தை வேறு இடத்திற்கு மாற்றவேண்டுமென்றால், அந்த மையம் அமைப்பதற்கு உரிய இடத்தை தேர்வு செய்து, அங்கு அம்மையம் அமைக்க எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்ற ஒப்புதலோடு முறைப்படி தெரிவித்தால், அதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு கருத்துரு அனுப்பப்படும் என ஆணையர் தெரிவித்தார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட இருந்தவர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக கூறி கலைந்து சென்றனர்.

Next Story