உசிலம்பட்டி அருகே, பழமையான கோவில் இடித்து அகற்றம் - கிராம மக்கள் திரண்டு வந்து ஆர்.டி.ஓ.விடம் புகார்


உசிலம்பட்டி அருகே, பழமையான கோவில் இடித்து அகற்றம் - கிராம மக்கள் திரண்டு வந்து ஆர்.டி.ஓ.விடம் புகார்
x
தினத்தந்தி 30 Sep 2020 11:00 AM GMT (Updated: 30 Sep 2020 10:56 AM GMT)

உசிலம்பட்டி அருகே 150 ஆண்டுகள் பழமையான கோவிலை தனியார் கல்லூரி நிர்வாகம் இடித்து அகற்றிவிட்டதாக கிராம மக்கள் திரண்டு வந்து ஆர்.டி.ஓ.விடம் புகார் அளித்தனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டியை அடுத்துள்ள தொட்டப்பநாயக்கனூர் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஸ்ரீரங்காபுரத்தில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சின்னமலை மகாலிங்கம் கோவில் இருந்தது.

இந்த கோவில் அங்குள்ள தனியார் வேளாண்மை கல்லூரி வளாகத்திற்குள் அமைந்திருந்தது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி அந்த கோவிலை தனியார் கல்லூரி நிர்வாகம் இடித்து அகற்றிவிட்டதாக தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா மற்றும் கிராம பெரியவர்கள் தலைமையில் கிராம மக்கள் ஒன்று திரண்டு உசிலம்பட்டி தேனி சாலையில் உள்ள முருகன் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு குவிந்தனர். பின்னர் அவர்கள் ஆர்.டி.ஓ.விடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், “சம்பந்தப்பட்ட இடத்தில் கல்லூரி கட்டப்படுவதற்கு முன்பு அங்கிருந்த சின்னமலை மகாலிங்கம் கோவிலில் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்க மாட்டோம் என்று கல்லூரி நிர்வாகம் உறுதிமொழி பத்திரம் ஒன்று எழுதிக் கொடுத்திருந்தது. இந்த நிலையில் அந்த கோவிலை கல்லூரி நிர்வாகம் இடித்து அகற்றியுள்ளது. அந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுமார் 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் விழா எடுப்பது வழக்கம்.

இந்த ஆண்டும் விழா எடுப்பதற்காக முயற்சி செய்து கோவிலை சுத்தம் செய்ய சென்றபோது கோவில் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. எனவே கோவிலை இடித்த தனியார் கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக கோவில் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

கிராம மக்களிடம் மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ. ராஜ்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story