தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 5,737 பேர் மீது வழக்கு


தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 5,737 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 Sep 2020 1:15 PM GMT (Updated: 30 Sep 2020 1:15 PM GMT)

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 எம்.எல்.ஏ.க்கள், ஒரு எம்.பி. உள்பட 5,737 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 14 இடங்களிலும், மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 10 இடங்களிலும் என மொத்தம் 24 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

இந்த ஆர்ப்பாட்டங்கள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி), ஒய்.பிரகாஷ் (தளி), பி.முருகன் (வேப்பனப்பள்ளி), எஸ்.ஏ.சத்யா (ஓசூர்) ஆகியோர் தலைமையில் நடந்தன. மேலும் மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் நகர, ஒன்றிய செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்தநிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மொத்தம் 3 ஆயிரம் பேர் மீது மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோன்று தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வேளாண் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். விவசாயிகளை பாதிக்கும் வேளாண் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டங்களில் வலியுறுத்தப்பட்டது. இதில் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், செந்தில்குமார் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க, கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என 2,737 பேர் மீது அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பல்வேறு தளர்வுகளுடன் கொரோனா பரவல் தடுப்பு விதிகள் அமலில் உள்ள நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story