எண்ணூர் துறைமுக நுழைவு வாயிலில் மீனவர்கள் போராட்டம்


எண்ணூர் துறைமுக நுழைவு வாயிலில் மீனவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2020 5:30 AM IST (Updated: 30 Sept 2020 11:00 PM IST)
t-max-icont-min-icon

எண்ணூர் துறைமுக நுழைவு வாயிலில் மீனவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

திருவொற்றியூர்,

எண்ணூரில் ஆறும், கடலும் கலக்கும் முகத்துவாரம் பகுதியில் மீன்கள், நண்டு, இறால் அதிக அளவில் கிடைக்கும். இப்பகுதியில் எண்ணூர் தாழங்குப்பம், நெட்டுகுப்பம், எண்ணூர் குப்பம், பெரிய குப்பம், சின்னகுப்பம், முகத்துவார குப்பம், சிவன்படை குப்பம், காட்டுக்குப்பம் ஆகிய 8 கிராம மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். மேலும் முகத்துவார பகுதியில் இருந்து கடலுக்குள் பைபர் படகுகளில் சென்று மீன்பிடித்தும் வந்தனர். இந்த நிலையில் எண்ணூரில் காமராஜர் துறைமுகம் அமைக்கப்பட்டது. இதனால் முகத்துவார பகுதியில் மணல் திட்டு ஏற்பட்டு மீன்வளம் குறைந்தது. இதனால் தங்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்பட்டு தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. துறைமுகம் அமைக்கப்பட்டதால் இந்த பகுதியில் கடலரிப்பு அதிகமாக இருப்பதால் 2 தூண்டில் வளைவுகள் அமைத்து கடலரிப்பை தடுக்க வேண்டும்.

முகத்துவாரத்தில் அதிகம் மண் சேருவதால் அதை ஆழப்படுத்தி தூர்வாரி தரவேண்டும் என பொதுப்பணித்துறை மற்றும் காமராஜர் துறைமுக அதிகாரிகளிடம் இந்த கிராம மீனவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் எண்ணூர் காமராஜர் துறைமுக வேலை வாய்ப்பில் மீனவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் பலமுறை கோரி வந்தனர். ஆனால் இவர்கள் கோரிக்கைகள் எதையும் எண்ணூர் துறைமுகம் செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை முகத்துவாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தாழங்குப்பம், சின்ன குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமத்து மீனவர்கள், 200-க்கும் மேற்பட்ட படகுகளில் அணி அணியாக சென்று கைகளில் கருப்பு கொடி ஏந்தி எண்ணூர் துறைமுக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு கண்டன கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கடலோர காவல் படை அதிகாரிகள், கரைக்கு செல்லும்படி மீனவர்களை அறிவுறுத்தினர். இதையடுத்து கரைக்கு திரும்பிய மீனவர்கள், தாழங்குப்பம் பஜாரில் கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் தாசில்தார் சரளா, மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மீனவர்கள், எண்ணூர் காமராஜர் துறைமுகம் அமைக்கப்பட்டதால் முகத்துவார பகுதியில் மணல் திட்டு ஏற்பட்டு கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் படகுகள் கவிழ்ந்து இதுவரை 8 மீனவர்கள் பலியாகி விட்டனர். படகுகள் சேதம் அடைந்து எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக முகத்துவாரத்தை தூர்வாரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வசதி செய்து கொடுக்க வேண்டும். கடலரிப்பை நிரந்தரமாக தடுக்க 2 தூண்டில் வளைவுகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்றனர்.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு மீனவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

மீனவர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக எண்ணூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மீனவ பெண்கள் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைகளில் கைகளில் கருப்பு கொடியுடன் நின்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மீனவர்களின் இந்த போராட்டம் காரணமாக எண்ணூரில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Next Story