உணவகங்களை 5-ந் தேதி முதல் திறக்கலாம் மராட்டியத்திற்குள் ரெயில்களை இயக்க அனுமதி அரசு புதிய தளர்வுகளை அறிவித்தது


உணவகங்களை 5-ந் தேதி முதல் திறக்கலாம் மராட்டியத்திற்குள் ரெயில்களை இயக்க அனுமதி அரசு புதிய தளர்வுகளை அறிவித்தது
x
தினத்தந்தி 1 Oct 2020 2:50 AM IST (Updated: 1 Oct 2020 2:50 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் ஊரடங்கு உத்தரவை 31-ந் தேதி வரை நீட்டித்து உள்ள அரசு புதிய தளர்வுகளை அறிவித்து உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் அந்த ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக நேற்று மாநில அரசு அறிவித்தது.

அதே நேரத்தில் புதிதாக பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது.

அதன் விவரம் வருமாறு:-

மாநிலத்திற்குள் ரெயில்கள்

* மாநிலத்திற்குள் உடனடியாக பயணிகள் ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் விதிமுறைகளை கடைப்பிடித்து ரெயில்கள் இயக்கப்படும்.

* மும்பை பெருநகரில் தற்போது இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

* மும்பை பெருநகர பகுதியில் மின்சார ரெயில்களில் டப்பாவாலாக்களுக்கு கியு-ஆர் கோர்டுடன் கூடிய பாஸ்கள் வழங்கப்பட்டு அவர்கள் பணியை தொடர அனுமதி வழங்கப்படும். இந்த பாஸ்களை அவர்கள் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து பெற வேண்டும்.

உணவகங்கள்

* மராட்டியத்தில் உணவகங்கள், ரெஸ்டாரண்ட்- பார்களை 50 சதவீத வாடிக்கையாளர்கள், ஊழியர்களுடன் வருகிற 5-ந் தேதி முதல் திறக்கலாம். இதற்காக உள்ளாட்சி அமைப்புகள் அறிவுறுத்தும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

* மும்பை பெருநகர பகுதியில் அத்தியாவசியமற்ற அனைத்து தொழில் உற்பத்தி நிறுவனங்களும் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

புனேயில் மின்சார ரெயில்கள்

* புனே மண்டலத்தில் மின்சார ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்படும்.

* ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தங்கு தடை இன்றி அனுமதி வழங்கப்படுகிறது.

* சுற்றுலா துறையை சார்ந்த தொழில்களை தொடங்க தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை

* பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் செயல்பட தொடர்ந்து தடை நீடிக்கிறது.

* தியேட்டர்கள், மால்களில் உள்ள தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கலையரங்குகள், கூட்டரங்கங்கள் செயல்பட தடை தொடர்கிறது.

* சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசாரம், மத நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு தடை நீடிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வழிபாட்டு தலங்கள்

வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என்று பா.ஜனதா மற்றும் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான கட்சி போராட்டங்கள் நடத்தின. ஆனால் புதிய தளர்வுகளில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

மேலும் மும்பையில் மின்சார ரெயில்களில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்தும் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் மாநிலத்திற்குள் பயணிகள் ரெயில்கள் இயக்கப்படும் என்று தளர்வு அறிவிக்கப்பட்டு இருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

Next Story