பெங்களூரு பசவனகுடி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ரவி சுப்பிரமணியாவுக்கு கொரோனா தனியார் மருத்துவமனையில் அனுமதி


பெங்களூரு பசவனகுடி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ரவி சுப்பிரமணியாவுக்கு கொரோனா தனியார் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 1 Oct 2020 3:55 AM IST (Updated: 1 Oct 2020 3:55 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு பசவனகுடி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ரவி சுப்பிரமணியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை நெருங்கிவிட்டது. சாமானிய மக்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரையும் பாகுபாடின்றி கொரோனா தாக்கி வருகிறது. மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா தனது வலையில் தொடர்ந்து வீழ்த்தி வருகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகள் 90-க்கும் மேற்பட்டோரை கொரோனா தாக்கி உள்ளது.

இதில் பெரும்பாலோனார் குணம் அடைந்து விட்டனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு பசவனகுடி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரவி சுப்பிரமணியா. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் கொரோனா அறிகுறியும் இருந்ததால் அவர் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் ஜெயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ரவி சுப்பிரமணியா எம்.எல்.ஏ., பா.ஜனதா தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா எம்.பி.யின் சித்தப்பா ஆவார்.

Next Story