தர்மபுரியில் பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் தடையை மீறியதாக 300 பேர் கைது


தர்மபுரியில் பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் தடையை மீறியதாக 300 பேர் கைது
x
தினத்தந்தி 3 Oct 2020 11:42 AM IST (Updated: 3 Oct 2020 11:42 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கக்கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தடையை மீறி போராட்டம் நடத்திய 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி,

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 80 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பணி வாய்ப்பு வழங்கப்படாமல் உள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரிய ஆசிரியைகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு பெண் விடுதலை கட்சியின் நிறுவனத்தலைவர் சபரிமாலா தலைமை தாங்கி பேசினார். இதில் தர்மபுரி, சேலம், விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொணடு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது சபரிமாலா பேசுகையில் கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படாததால் அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். மேலும் அவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் மட்டுமே. தற்போது 6 ஆண்டுகள் முடிந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.

அப்போது போலீசார் 144 தடை அமலில் உள்ளதால் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறினர். தடையை மீறி போராட்டம் நடத்தியதாக பெண் விடுதலை கட்சி நிறுவனத்தலைவர் சபரிமாலா உள்பட 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story