தொழில் அதிபர் கொலை வழக்கில் சிறுவன், கார் டிரைவர் கைது பரபரப்பு வாக்குமூலம்


தொழில் அதிபர் கொலை வழக்கில் சிறுவன், கார் டிரைவர் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 4 Oct 2020 1:48 AM GMT (Updated: 4 Oct 2020 1:48 AM GMT)

கோவை தொழில் அதிபரை கொலை செய்த கால் டாக்சி டிரைவர் மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

கோவை.

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 85) தொழில் அதிபர். இவர் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் கேபிள் ஒயர் மூலம் கழுத்தை இறுக்கி படுகொலை செய்யப்பட்டார். மேலும் அவரது வீட்டில் இருந்த நகை-பணம் ஆகியவற்றையும், கிருஷ்ணசாமியின் 2 செல்போன்களையும் எடுத்துக்கொண்டு மர்ம நபர்கள் வீட்டில் நிறுத்தி இருந்த காரில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கொலையாளிகளை பிடிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் ஸ்டாலின் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார், தொழில் அதிபர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மேலும் கொலையாளிகள் தப்பிச்சென்ற கார் கோவையை விட்டு வெளியே சென்றதா? என்றும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கொலையாளிகள் சென்ற கார் திருச்சி சாலையில் உள்ள சோதனை சாவடிகளை கடந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து மற்ற மாவட்ட போலீசாருக்கு கொலையாளிகள் தப்பிச் சென்ற கார் மற்றும் அதன் பதிவு எண் ஆகியவற்றை கோவை போலீசார் தெரிவித்தனர். மேலும் கொலையாளிகள் எடுத்துச் சென்ற கிருஷ்ணசாமியின் காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ்.சை டிராக்கிங் செய்த போது கொலையாளிகள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருப்பது உறுதியானது. இதுகுறித்து கோவை போலீசார் காரைக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சிவகங்கை தெற்கு போலீசார் அங்கு சென்றனர். அப்போது காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பஞ்சர் ஆன நிலையில் கார் நின்றிருந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த காரை ஆய்வு செய்தனர். அப்போது அந்த காரில் இருந்து ஒரு லாட்ஜ் பெயரைக் கொண்ட விசிட்டிங் கார்டை போலீசார் கைப்பற்றினார்கள்.

பின்னர் போலீசார் அந்த லாட்ஜ்க்கு சென்று சோதனை நடத்தினார்கள். இதில், அங்கு சந்தேகத்திற்கு இடமாக தங்கியிருந்த காரைக்குடி மாவட்டம் காரைகொண்டான் ஏம்பலை என்ற பகுதியை சேர்ந்த விக்ரம் (24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 2 பேரும் தான் கோவை தொழில் அதிபர் கிருஷ்ணசாமியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் கொலையாளிகள் 2 பேரையும் காரைக்குடி போலீசார் கோவைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் விக்ரம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தேன். பின்னர் எனது ஊரை சேர்ந்த ஒண்டிப்புதூரில் வசித்து வரும் 17 சிறுவனை சந்தித்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து கிருஷ்ணசாமி வீட்டை நோட்டமிட்டோம். அப்போது அவர் வீட்டில் தனியாக இருப்பதை உறுதி செய்தோம். சம்பவத்தன்று இரவு இரும்பு கம்பியுடன் அவரது வீட்டிற்குள் நுழைந்தோம். எங்களை கண்டதும் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணசாமி சத்தம் போட முயன்றார். உடனே அவரை இரும்பு கம்பியால் தாக்கினோம். இதனால் பயந்து போன அவர் எதை வேண்டுமானாலும் திருடி செல்லுங்கள் என்னை கொலை செய்து விடாதீர்கள் என்று கெஞ்சினார்.

இதனால் நாங்கள் அவரை சோபாவில் அமர வைத்து கைகால்களை டெலிபோன் கேபிள் ஒயரால் கட்டினோம். பின்னர் வீட்டில் இருந்த நகை-பணம் மற்றும் அவரது செல்போன்களை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தோம். அப்போது அவர் கட்டுகளை அவிழ்த்து விடும்படி கத்தினார். இதனால் பயந்து போன நாங்கள் அவர் எப்படியும் காட்டிக்கொடுத்துவிடுவார் என்று நினைத்து அவரது கழுத்தை கேபிள் ஒயரால் இறுக்கி கொலை செய்தோம். அவர் இறந்ததும் காரை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றோம். பின்னர் காரைக்குடி வந்து ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினோம்.

காந்தி ஜெயந்தி என்பதால் அன்றைய தினம் டாஸ்மாக் கடை திறந்து இருக்காது என்பதால் காரை எடுத்துக்கொண்டு மது வாங்க கிராம பகுதிக்கு சென்றோம். மது வாங்கி விட்டு வரும்போது கார் பஞ்சர் ஆகிவிட்டது. இதனால் காரை அங்கேயே விட்டுவிட்டு லாட்ஜில் வந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது போலீசார் எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு விக்ரம் கூறியுள்ளார்.

17 வயது சிறுவனை போலீசார் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். கைதான விக்ரமிடம் இருந்து 6 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர். கைதான விக்ரமிற்கு கொள்ளையடிக்க ஆலோசனை அளித்த கோவை சிறையில் உள்ள காவலாளி யார்? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story