ஒரு ஆண்டுக்கு முன்பு மாயமான பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு போலீசார் நடவடிக்கை


ஒரு ஆண்டுக்கு முன்பு மாயமான பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Oct 2020 5:06 AM IST (Updated: 5 Oct 2020 5:06 AM IST)
t-max-icont-min-icon

ஒரு ஆண்டுக்கு முன்பு மாயமான பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதற்கான நடவடிக்கையை போலீசார் எடுத்தனர்.

தூத்துக்குடி,

சென்னை முகப்பேரில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தினர், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் தங்கள் பராமரிப்பில் இருப்பதாகவும், அவரது உறவினர்களை கண்டுபிடித்து குடும்பத்தாரிடம் அந்த பெண்ணை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க கோரி, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்தனர்.

அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, முத்தையாபுரம் சுபாஷ் நகரை சேர்ந்த சக்தி கிருஷ்ணன் என்பவர், தனது தாயார் வேல்கனி (வயது 45) சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர். ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல் போனதாகவும், அது குறித்து யாரிடமும் எவ்வித புகாரும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்து உள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார், அவரது தாயாரின் புகைப்படத்தை பெற்று சென்னையில் உள்ள தொண்டு நிறுவனத்துக்கு அனுப்பினர். அவர்கள் அதனை உறுதி செய்த பிறகு, அங்கு உள்ள பெண்ணின் புகைப்படத்தை பெற்று சக்தி கிருஷ்ணனிடம் போலீசார் காண்பித்தனர். அப்போது அவரது தாய் வேல்கனி என்பது உறுதி செய்யப்பட்டது.

ஒப்படைப்பு

இதைத் தொடர்ந்து போலீசார் சென்னையில் இருந்து அந்த பெண்ணை தூத்துக்குடிக்கு அழைத்து வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.

Next Story