சக்லேஷ்புராவில், தாயை பிரிந்து தவித்த குட்டி யானை, சக்கரேபைலு முகாமிற்கு கொண்டு வரப்பட்டது


சக்லேஷ்புராவில், தாயை பிரிந்து தவித்த குட்டி யானை, சக்கரேபைலு முகாமிற்கு கொண்டு வரப்பட்டது
x
தினத்தந்தி 6 Oct 2020 3:06 AM IST (Updated: 6 Oct 2020 3:06 AM IST)
t-max-icont-min-icon

சக்லேஷ்புராவில் தாயை பிரிந்து தவித்த குட்டி யானை சக்கரேபைலு யானைகள் பயிற்சி முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு குட்டி யானையை கால்நடை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

சிவமொக்கா,

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா அருகே வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள மலளி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்ப்பிணி யானை ஒன்று புகுந்தது. அந்த யானை, அங்குள்ள ஒரு காபி தோட்டத்தில் வைத்து திடீரென்று குட்டி ஒன்றை ஈன்றது. அந்த சமயத்தில் குட்டி யானையின் காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அந்த குட்டி யானை, எழுந்து நிற்க முடியாமல் படுத்தே கிடந்தது. இதுபற்றி அறிந்ததும் சக்லேஷ்புரா வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.

அப்போது குட்டி யானை அருகில் நின்று கொண்டிருந்த தாய் யானையை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து விரட்டியடித்தனர். அதன்பின்னர், அந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் கால்நடை மருத்துவர் உதவியுடன் அந்த குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சக்கரேபைலு வனப்பகுதிக்கு...

இந்த நிலையில் காலில் ஏற்பட்ட முறிவு காரணமாகவும், தாயை பிரிந்த சோகத்திலும் அந்த குட்டி யானை சரிவர சாப்பிடாமல் இருந்து வருகிறது. இதனால் குட்டி யானை மிகவும் சோர்வாக காணப்பட்டது. பிறந்து 4 நாட்களிலேயே தாயை பிரிந்ததால் அந்த குட்டி யானை கண்ணீர்விட்டு பரிதவித்தது. இதையடுத்து அந்த குட்டி யானையை யானைகள் பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைத்து அங்குள்ள யானைகள் மூலம், குட்டி யானைக்கு புத்துணர்ச்சி வரவழைக்க முடிவு செய்தனர்.

அதன்படி, சக்லேஷ்புரா வனத்துறையினர் அந்த குட்டி யானையை சிவமொக்கா மாவட்டம் சக்கரேபைலுவில் உள்ள யானைகள் பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைத்தனர். அந்த குட்டி யானை நேற்று முன்தினம் சக்கரேபைலு பயிற்சி முகாமிற்கு லாரியில் கொண்டு வரப்பட்டது.

தீவிர கண்காணிப்பு

அந்த முகாமில் வைத்து கால்நடை மருத்துவர்கள் குட்டி யானைக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அந்த குட்டி யானையின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், குட்டி யானையால் எழுந்து நிற்க முடியவில்லை. தாயின் அரவணைப்பு இல்லாததாலும், தாய்ப்பால் குடிக்காததாலும் அந்த குட்டி யானையின் உடல் நிலை மிகவும் சோர்வாக உள்ளது. இதனால், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை குட்டி யானைக்கு புட்டி மூலம் ஒரு லிட்டர் பால் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த குட்டி யானையின் உடல் நிலையை கால்நடை மருத்துவர் வினய் மற்றும் அவருடைய உதவியாளர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். குட்டி யானையின் எலும்பு முறிவு சரிசெய்யப்பட்டு, அதனை மற்ற யானைகளுடன் பழக வைக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

23 யானைகள்

கர்நாடகத்திலேயே பெரிய, யானைகள் பயிற்சி முகாம் என்ற பெருமை சக்கரேபைலுவுக்கு உண்டு. இதுவரை அந்த பயிற்சி முகாமில் 22 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது வந்துள்ள குட்டி யானையையும் சேர்த்து அந்த எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இந்த குட்டி யானையுடன் சேர்ந்து முகாமில் மொத்தம் 5 குட்டி யானைகள் உள்ளன. இந்த குட்டி யானையை போல தான், பாலாஜி, ஐராவதா, சாரதா ஆகிய 3 குட்டி யானைகளும் வனப்பகுதியில் இருந்து பயிற்சி முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. இதில் சாரதா என்ற குட்டி யானை உடல் நலக்குறைவால் செத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story