எனது மகன் மீதான அன்பால் சி.பி.ஐ. சோதனை டி.கே.சிவக்குமாரின் தாய் சொல்கிறார்


எனது மகன் மீதான அன்பால் சி.பி.ஐ. சோதனை டி.கே.சிவக்குமாரின் தாய் சொல்கிறார்
x
தினத்தந்தி 6 Oct 2020 3:14 AM IST (Updated: 6 Oct 2020 3:14 AM IST)
t-max-icont-min-icon

எனது மகன் மீதான அன்பால் வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பதாக டி.கே.சிவக்குமாரின் தாய் கூறியுள்ளார்.

பெங்களூரு,

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக கூறி காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீடு, அலுவலகங்களில் நேற்று சி.பி.ஐ. சோதனை நடத்தி இருந்தது. ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா தொட்டஆலதஹள்ளியில் உள்ள டி.கே.சிவக்குமார் வீட்டிலும் சோதனை நடந்திருந்தது. அங்கு டி.கே.சிவக்குமாரின் தாய் கவுரம்மா வசிக்கிறார்.

இந்த சோதனை குறித்து கவுரம்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

மிகுந்த வேதனைஅளிக்கிறது

எனது மகன் வீட்டில் எதற்காக அடிக்கடி சோதனை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. என்னுடைய வயிறு எரிகிறது. சி.பி.ஐ., அமலாக்கத்துறைக்கு எனது மகன் மீது அன்பு அதிகம் என்று நினைக்கிறேன். அதனால் தான் அடிக்கடி வந்து அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்துகிறார்கள்.

வீட்டு பீரோவை உடைத்து உள்ளே இருப்பதை எடுத்து செல்லட்டும். என்னையும், எனது மகனையும் சி.பி.ஐ. அழைத்து செல்லட்டும். எங்களுக்கு நேரத்திற்கு சாப்பாடு கொடுத்தால் போதும். எனது வீட்டில் நடந்த சோதனையில் எந்த ஆவணமும் சிக்கவில்லை. விசாரணைக்கு வரும்படி கூறி எனக்கு எந்த விதமான நோட்டீசும் வழங்கவில்லை. எனது மகன் வீட்டில் தொடர்ந்து சோதனை நடத்துவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story