மாவட்ட செய்திகள்

ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தையில் விவசாயிகள் ‘திடீர்’ போராட்டம் + "||" + Farmers 'sudden' protest at Erode Sampathnagar Farmers Market

ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தையில் விவசாயிகள் ‘திடீர்’ போராட்டம்

ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தையில் விவசாயிகள் ‘திடீர்’ போராட்டம்
ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தையில் விவசாயிகள் ‘திடீர்’ போராட்டத்தில் ஈடுபட்டதால் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஈரோடு,

ஈரோடு சம்பத் நகர் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தையில் மொத்தம் 630 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். சுழற்சி அடிப்படையில் விவசாயிகள் இங்கு காய்கறி விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாகவும், பஸ் போக்குவரத்து முழுமையாக இல்லாததாலும், காய்கறி வரத்து குறைவு உள்ளதாலும், கடந்த 6 மாதங்களாக 95 விவசாயிகள் மட்டுமே உழவர் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.


இந்தநிலையில் உழவர் சந்தையில் விவசாயிகள், மொத்த வியாபாரிகளிடம் காய்கறிகளை அதிகாலையே விற்பனை செய்து விடுவதால், காலை 6.30 மணிக்கு மேல் வரும் பொதுமக்களால் குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கி செல்ல முடியவில்லை. இதனால், பொதுமக்கள் உழவர் சந்தை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.

போராட்டம்

இதைத்தொடர்ந்து உழவர் சந்தை அதிகாரிகள் விவசாயிகளிடம், காலை 7 மணிக்கு மேல் தான் மொத்த வியாபாரிகளுக்கு காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும். அதுவரை சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என கட்டுப்பாடு விதித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் நேற்று காலை உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்து, விற்பனை செய்யாமல் திடீர் என நுழைவு வாயிலை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் உழவர்சந்தை விற்பனை கண்காணிப்பு அதிகாரிகள் சுசீலா உள்ளிட்ட சிலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் விரைந்து வந்து உழவர் சந்தை நுழைவு வாயிலை திறந்து விட்டனர்.

டோக்கன்

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறும்போது, ‘சம்பத் நகர் உழவர் சந்தையில் மொத்த வியாபாரிகளுக்கு காலை 7 அல்லது 8 மணிக்கு தான் காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும் என புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். வியாபாரிகளுக்கு 7 மணிக்கு மேல் நாங்கள் விற்பனை செய்தால், அவர்கள் எங்களிடம் வாங்கி சென்று எத்தனை மணிக்கு விற்பனை செய்வார்கள். எனவே, மொத்த வியாபாரிகளுக்கு வழக்கம்போல் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.

அதேபோல், உழவர் சந்தைக்கு அருகிலேயே வெளி வியாபாரிகள் கடை அமைத்து விற்பனை செய்கின்றனர். இதனால், உழவர் சந்தை விற்பனை பாதிக்கப்படுகிறது. சானிடைசருக்கு விவசாயிகள் பணம் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். மேலும் எங்களது வாகனங்களை சந்தை பகுதிக்குள் நிறுத்த அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. டோக்கன்களும் முறையாக வழங்குவதில்லை’ என்றனர்.

பொதுமக்கள் ஏமாற்றம்

அதற்கு வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் சண்முகசுந்தரம் கூறும்போது, ‘விவசாயிகளான நீங்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு, உரிய விலை கிடைப்பதற்காக மட்டுமே உழவர் சந்தை தொடங்கப்பட்டது. உழவர் சந்தையில் நுகர்வோர்களான மக்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய அனுமதி உள்ளது. மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய அனுமதி கிடையாது. காய்கறி வரத்து குறைந்ததாலும், கொரோனா ஊரடங்கு காரணமாக நீங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் இத்தனை நாட்கள் வியாபாரிகள் உள்ளே வருவதை தடுக்காமல் இருந்தோம்.

ஆனால், தற்போது காய்கறிக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், நீங்கள் வியாபாரிகளுக்கு மொத்தமாக காய்கறிகளை விற்பனை செய்து விடுவதால், மக்களுக்கு காய்கறி கிடைப்பதில்லை. எனவே, நீங்கள் காலை 7 மணிக்கு மேல் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யுங்கள். உழவர் சந்தைக்கு அருகில் 100 மீட்டர் வரை வெளி வியாபாரிகள் கடை அமைக்காமல் இருக்க போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கிறோம்’ என உறுதி அளித்தார்.

அதன்பேரில், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தின் காரணமாக உழவர் சந்தை விவசாயிகள் நேற்று காலை கொண்டு வந்த விளை பொருட்களை விற்பனை செய்யவில்லை. இதனால், சந்தைக்கு வந்த பொதுமக்கள் காய்கறிகள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் உழவர் சந்தையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. திருவெண்ணெய்நல்லூர் அருகே சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே சேறும், சகதியுமான சாலையில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. சின்னசேலம் அருகே பாதை பிரச்சினையால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினர்கள் போராட்டம்
சின்னசேலம் அருகே பாதை பிரச்சினையால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
3. ராசிபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் போராட்டம்
ராசிபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.
4. சாக்குலூத்துமெட்டு மலைப்பாதையில் சாலை அமைக்கக்கோரி விவசாயிகள் நடைபயணம் போலீசார் தடுத்ததால் பரபரப்பு
தேவாரம் அருகே சாக்குலூத்து மெட்டு மலைப்பாதையில் சாலை அமைக்கக்கோரி விவசாயிகள் நடைபயணம் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. சம்பள விவகாரம்; டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து மருத்துவர்கள் போராட்டம்
டெல்லியில் கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் ராவணன் உருவ பொம்மையை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.