போதைப்பொருள் விற்பனையில் தொடர்பு: மறைந்த நிழல் உலக தாதா முத்தப்பா ராயின் மகன் கைது + "||" + Contact in drug trafficking: The son of the late shadow world grandfather Muthappa Roy has been arrested
போதைப்பொருள் விற்பனையில் தொடர்பு: மறைந்த நிழல் உலக தாதா முத்தப்பா ராயின் மகன் கைது
போதைப்பொருள் விற்பனையில் தொடர்பு உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், மறைந்த நிழல் உலக தாதா முத்தப்பா ராயின் மகன் ரிக்கி ராயை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூருவில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்தது தொடர்பாக, கன்னட சின்னத்திரை நடிகை அனிகா, அவரது கூட்டாளிகள் அனுப், ரவீந்திரன் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து இருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கன்னட நடிகர்கள், நடிகைகளுக்கு 3 பேரும் போதைப்பொருட்களை விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருளை பயன்படுத்தியது மற்றும் அந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரும் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் போதைப்பொருள் விற்பனையாளர்களான வீரேன் கண்ணா, பிரதிக் ஷெட்டி, லோயம் பெப்பர் சம்பா, பினால்டு, பிரசாந்த் ரங்கா உள்ளிட்ட சிலரும் கைது செய்யப்பட்டார்கள். மேலும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேர் மீது காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
முத்தப்பா ராயின் வீடுகளில் சோதனை
இதில் முதல் குற்றவாளி என்று கூறப்படும் சிவபிரகாஷ், 6-வது குற்றவாளியான முன்னாள் மந்திரி ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் போதைப்பொருள் விற்பனையில் மறைந்த நிழல் உலக தாதா முத்தப்பா ராயின் மகன் ரிக்கி ராயுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் ஆதித்யா ஆல்வாவும், ரிக்கி ராயும் நெருங்கிய நண்பர்கள் என்றும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து ரிக்கி ராயின் வீடுகளில் சோதனை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.
மேலும் ரிக்கி ராயின் வீட்டில் சோதனை நடத்த கோர்ட்டில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் அனுமதியும் பெற்று இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை ராமநகர் மாவட்டம் பிடதி மற்றும் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள முத்தப்பா ராயின் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
விசாரணை
மத்திய குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் வேணுகோபால் தலைமையில் நடந்த இந்த சோதனையில் 2 வீடுகளிலும் சுமார் 25-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது முத்தப்பா ராயின் வீடுகளில் இருந்து சில பொருட்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து கொண்டதாக தெரிகிறது. பின்னர் மாகடியில் உள்ள வீட்டில் வைத்து 4 மணி நேரம் வரை ரிக்கி ராயிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். அப்போது அவரிடம் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக சில தகவல்களை போலீசார் பெற்றுக்கொண்டதாக தெரிகிறது.
கைது-பரபரப்பு
பின்னர் அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது ரிக்கி ராய் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதும், அதை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
போதைப்பொருள் விற்பனை வழக்கில் மறைந்த நிழல் உலக தாதா முத்தப்பா ராயின் மகன் ரிக்கி ராய் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக காங்கிரஸ் முன்னாள் மந்திரியின் மகனை கோவாவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பால் வீட்டில் நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் கொடுத்தனர்.