கிண்டி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி: தி.மு.க., எம்.பி. கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்கு


கிண்டி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி: தி.மு.க., எம்.பி. கனிமொழி உள்பட 191 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Oct 2020 4:38 AM IST (Updated: 7 Oct 2020 4:38 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச சம்பவத்துக்கு நீதி கேட்டு கிண்டி கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 191 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆலந்தூர்,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் இளம் பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு, தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை நோக்கி நேற்று முன்தினம் பேரணி நடைபெற்றது.

கிண்டி சின்னமலை ராஜீவ்காந்தி சிலை அருகே இருந்து தொடங்கிய பேரணியில், தி.மு.க. மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் திரண்டனர். இந்த பேரணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தீபச்சுடர் ஏற்றி தொடங்கிவைத்தார்.

இந்த நிலையில், கனிமொழி எம்.பி. தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கனிமொழி மீது வழக்கு

பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 191 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தொற்று நோய் பரவல் சட்டம் உள்பட 5 பிரிவின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல் தி.மு.க. மகளிரணி நடத்திய பேரணிக்கு எதிராக பாரதீய ஜனதா கட்சி மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி உள்பட 11 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Next Story