ராமநகர் அருகே பயங்கரம் காதல் விவகாரத்தில் வாலிபர் ஆணவ கொலை காதலியின் குடும்பத்தினரிடம் போலீஸ் விசாரணை


ராமநகர் அருகே பயங்கரம் காதல் விவகாரத்தில் வாலிபர் ஆணவ கொலை காதலியின் குடும்பத்தினரிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 8 Oct 2020 3:26 AM IST (Updated: 8 Oct 2020 3:26 AM IST)
t-max-icont-min-icon

ராமநகர் அருகே காதல் விவகாரத்தில் வாலிபரை காதலி குடும்பத்தினர் ஆணவ கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக காதலியின் குடும்பத்தினரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ராமநகர்,

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா பசவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிபதி (வயது 25). இவர், வேறு மதத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அந்த இளம்பெண்ணும், லட்சுமிபதியை காதலித்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள், லட்சுமிபதியுடன் உள்ள காதலை கைவிடும்படி கூறியதாக தெரிகிறது. அதே நேரத்தில் அந்த இளம்பெண்ணை லட்சுமிபதி தொடர்ந்து காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று காலையில் ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா கனகோனஹள்ளி கிராமத்தில் லட்சுமிபதி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

ஆணவ கொலை

தகவல் அறிந்ததும் மாகடி போலீசார் விரைந்து சென்று லட்சுமிபதியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது வேறு மதத்தை சேர்ந்த இளம்பெண்ணை அவர் காதலித்து வந்ததால், இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் லட்சுமிபதியிடம் சமாதானமாக பேச வேண்டும் என்று கூறி, கனகோனஹள்ளிக்கு அழைத்து வந்து கழுத்தை நெரித்து ஆணவ கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாகடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் குடும்பத்தினர் சிலரை பிடித்து வருகின்றனர். தலைமறைவாகி விட்டவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

காதல் விவகாரத்தில் வாலிபர் ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story