தூத்துக்குடி துறைமுகம் அருகே லாரி டிரைவர்கள் திடீர் போராட்டம்


தூத்துக்குடி துறைமுகம் அருகே லாரி டிரைவர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2020 5:23 PM GMT (Updated: 8 Oct 2020 5:23 PM GMT)

தூத்துக்குடி துறைமுகம் அருகே லாரி டிரைவர்கள் நேற்று திடீரென போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக துறைமுகத்துக்கு சரக்கு ஏற்ற செல்லும் லாரிகளில் டிரைவர் மட்டுமே இருக்க வேண்டும். கிளீனர்கள் உடன் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் துறைமுகத்துக்குள் நெருக்கடியான நேரத்தில் லாரியை இயக்குவதற்கு சிரமப்பட்டு வந்தனர்.

தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், கிளீனர்களை துறைமுகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி லாரி டிரைவர்கள் நேற்று அந்த பகுதியில் உள்ள எடைநிலையம் அருகே தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெகன் தலைமையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டன.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தெர்மல்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, துறைமுக போக்குவரத்து அதிகாரி வந்த பிறகு பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் லாரி டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story