குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: கடற்கரை பகுதியில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை


குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: கடற்கரை பகுதியில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை
x
தினத்தந்தி 9 Oct 2020 2:20 AM IST (Updated: 9 Oct 2020 2:20 AM IST)
t-max-icont-min-icon

குலசேகன்பட்டினம் தசரா திருவிழாவையட்டி கடற்கரை பகுதியில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை என்று ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நடத்துவது தொடர்பாக பல்வேறு இந்து அமைப்புகள், திருவிழாக்குழுக்கள், தசரா குழுவினர் பங்கேற்ற ஆலோ சனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனுமதி இல்லை

கூட்டத்தில் கொரோனா தடை உத்தரவு அமலில் உள்ளதால், திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், விழாவில் எவ்வளவு பக்தர்களை அனுமதிக்கலாம், உபயதாரர்கள், மண்டகபடிதாரர்கள் சாமி தரிசனம் செய்வது குறித்தும், பக்தர்களுக்கு திருக்கோவிலில் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் அனுமதி பெற்றவர்களை அனுமதிப்பது மற்றும் நேரடியாக கோவிலுக்கு வருபவர்களை அனுமதிப்பது, தசரா குழுக்கள் தங்களை முன்கூட்டியே பதிவு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் கடற்கரை பகுதியில் எந்தவொரு நிகழ்ச்சிக்கும், பக்தர்களுக்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், தற்காலிக கழிப்பிட வசதி, பாதுகாப்பு வசதி, மருத்துவ முகாம்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்் பரஞ்ஜோதி, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ் சிங், கோவில் தக்கார் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் ரத்தினவேல்பாண்டியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா மற்றும் அலுவலர்கள், தசரா குழுவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story