கர்நாடகத்தில் புதிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் எடியூரப்பா தகவல்


கர்நாடகத்தில் புதிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் எடியூரப்பா தகவல்
x
தினத்தந்தி 8 Oct 2020 10:26 PM GMT (Updated: 8 Oct 2020 10:26 PM GMT)

கர்நாடகத்தில் புதிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் சுற்றுலாத்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை மந்திரி சி.டி.ரவி மற்றும் அத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய எடியூரப்பா, “கர்நாடகத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஒரு அறிக்கையை தயாரித்து விரைவாக தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையில் கூறப்படும் அம்சங்களை நிறைவேற்ற அரசு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யும்“ என்றார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் மந்திரி சி.டி.ரவி பேசியதாவது:-

சுற்றுலா தலங்கள் உள்ள மாவட்டங்களை அடையாளம் கண்டு, அந்த தலங்களை மேம்படுத்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும். உரிய அதிகாரிகள் இல்லாமல் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது சாத்தியமில்லை. சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் அதற்கென்றே கே.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்க வேண்டும். சுற்றுலா தலங்களை அடையாளம் காண்பது, அவற்றை மேம்படுத்துவது போன்றவை தான் சுற்றுலா துறையின் முக்கிய நோக்கமாக உள்ளது.

ரூ.120 கோடியில் திட்டம்

மேலும் அவர், கெம்மன்குந்தி மற்றும் நந்திபெட்டா சுற்றுலா தலங்களின் மேம்பாட்டு பணிகளை சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி பகுதியை மேம்படுத்த ரூ.120 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாதாமி சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. அங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகை தருகிறார்கள். அதனால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சர்வதேச தரத்தில் மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு சி.டி.ரவி பேசினார்.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை செயலாளர் அனில்குமார், கர்நாடக சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் சுருதி உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story