பாபநாசம் அருகே, குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது
பாபநாசம் அருகே குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாபநாசம்,
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா சரபோஜிராஜபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கருப்பையன்(வயது 60). இவர், அரசு சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து தஞ்சை மாவட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன், பாபநாசம் தாசில்தார் கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் இளம்மாருதி, வருவாய் ஆய்வாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று சரபோஜிராஜபுரம் பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கருப்பையன் சரபோஜிராஜபுரம் கிராமத்தில் 3 இடங்களில் குடோன்களில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த 500-க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளையும், ரேஷன் அரிசி மூட்டைகளை கொண்டு வர பயன்படுத்திய சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் இளம்மாருதி தஞ்சை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறைக்கு புகார் அளித்தார். இதன்பேரில் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லு, இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கருப்பையனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான பாபநாசம் வட்டார குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் என கூறப்படுகிறது.
குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பாபநாசம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story