வங்கி வாடிக்கையாளர் பெயரில் புதிய கிரெடிட் கார்டு வாங்கி ரூ.10 லட்சம் நூதன மோசடி சாப்ட்வேர் என்ஜினீயர் கைது + "||" + 10 lakh fraudulent software engineer arrested for buying a new credit card in the name of a bank customer
வங்கி வாடிக்கையாளர் பெயரில் புதிய கிரெடிட் கார்டு வாங்கி ரூ.10 லட்சம் நூதன மோசடி சாப்ட்வேர் என்ஜினீயர் கைது
வங்கி வாடிக்கையாளர் பெயரில் புதிய கிரெடிட் கார்டு வாங்கி ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் மோசடி செய்த சாப்ட்வேர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி,
சென்னையை அடுத்த முகலிவாக்கத்தை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 55). இவர், வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். இவர் வடபழனியில் உள்ள தனியார் வங்கியில் இவரது பெயரில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதயராஜிடம் வங்கியில் இருந்து பேசுவதாக செல்போனில் பேசிய மர்மநபர், அவருடைய கிரெடிட் கார்டை பிளாக் செய்து விட்டு புதிய கார்டு கொடுப்பதாக கூறி, வங்கி சம்பந்தப்பட்ட தகவல்களை வாங்கினார். இதுபோல் மேலும் சில அழைப்புகள் வந்துள்ளது. அதன்பிறகு அவரது கிரெடிட் கார்டில் இருந்து ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ரூ.5 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.30 ஆயிரம் என மொத்தம் ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் எடுத்துள்ளதாக இருதயராஜ் செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசாரிடமும், மாங்காடு போலீசிலும் புகார் அளித்தார்.
என்ஜினீயர் கைது
இதுகுறித்து அம்பத்தூர் துணை கமிஷனர் தீபா சத்யன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமரன், விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இருதயராஜ் செல்போனுக்கு வந்த அழைப்புகளின் செல்போன் எண்களை வைத்து விசாரணை செய்தனர். அப்போது தான் இருதயராஜ் பெயரில் இருந்த கிரெடிட் கார்டை பிளாக் செய்து விட்டு அவருக்கு தெரியாமலேயே அவரது பெயரில் புதிதாக கிரெடிட் கார்டை வாங்கி அதை பயன்படுத்தி பணத்தை எடுத்து மோசடி செய்து இருப்பது தெரிந்தது.
இதுதொடர்பாக கோயம்பேட்டை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான கார்த்திகேயன் (28) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது:-
புதிய கிரெடிட் கார்டு
கார்த்திகேயன் தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு சம்பந்தமான வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பேசும் கஸ்டமர்கேர் பகுதியில் பணிபுரிந்து வந்தார். அப்போது இருதயராஜின் கிரெடிட் கார்டில் அதிக தொகை வைத்திருக்கும் தகவல் அவருக்கு தெரியவந்தது.
பின்னர் அவர் வங்கியில் இருந்து பேசுவதாக இருதயராஜிடம் பேசி முதலில் அவரது கிரெடிட் கார்ட்டை பிளாக் செய்தார். பின்னர் அவரது பெயரில் அவருக்கு தெரியாமலேயே புதிதாக ஒரு கிரெடிட் கார்டை வங்கியில் விண்ணப்பித்தார். அதனை பெற அவரது வீட்டிற்கு முதலில் ஒரு கூரியர் அனுப்பி உள்ளார். அந்த கூரியரை எந்த ஊழியர் கொண்டு வந்து கொடுப்பார் என்ற விவரத்தை பெற்று கொண்டு அந்த நேரத்தில் இவரே அந்தநேரத்தில் அங்கு சென்று வீட்டின் உரிமையாளர் போல் நின்று கூரியரை வாங்கியுள்ளார்.
கண்காணிப்பு கேமரா பதிவு
அதன் பிறகு மீண்டும் கிரெடிட் கார்டை அனுப்பி அந்த கிரெடிட் கார்டையும் இவரே கையெழுத்து போட்டு வாங்கி உள்ளார். அதன் பின்பு இருதயராஜ் போன்று வங்கியிலும், வங்கியில் இருந்து பேசுவதுபோல் இருதயராஜிடமும் பேசி, அவரது செல்போனுக்கு வந்த புதிய கிரெடிட் கார்டின் ரகசிய எண்ணை பெற்றுக்கொண்டு அதை பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
கூரியர் அலுவலகம் மற்றும் கூரியர் வாங்க வரும் போதும், வங்கிக்கு செல்லும் போதும் ஒரே ஹெல்மெட்டுடனே சென்றுள்ளார். கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்த ஹெல்மெட்டும், மொபட்டின் நம்பரையும் வைத்து கார்த்திகேயனை கைது செய்தோம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
கைதான கார்த்திகேயனிடம் இருந்து ஏராளமான கிரெடிட் கார்டுகள் மற்றும் சுவைப் மெசின், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து தனிப்படை போலீசாருக்கு துணை கமிஷனர் தீபா சத்யன் பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கவுரவித்தார்.
சென்னை தரமணி அசென்டாஸ் சாலையில் உலக வங்கி உள்ளது. இந்த வங்கியின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியான சரத் சந்தர், தரமணி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார்.