ரூ.24 கோடி நிலுவைத்தொகையை வழங்கக்கோரி தென்காசியில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ரூ.24 கோடி நிலுவைத்தொகையை வழங்கக்கோரி தென்காசியில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2020 5:35 AM IST (Updated: 9 Oct 2020 5:35 AM IST)
t-max-icont-min-icon

ரூ.24 கோடி நிலுவைத்தொகையை தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் உடனடியாக வழங்கக்கோரி தென்காசியில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் செயல்படும் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் தங்களுக்கு கடந்த 2018-2019-ம் ஆண்டில் கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு 2019 மார்ச் மாதம் முதல் பணம் எதுவும் வழங்கவில்லை. மொத்தம் ரூ.24 கோடி நிலுவைத்தொகையாக உள்ளது.

இந்த தொகையை வழங்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி தென்காசி கலெக்டர் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் பணம் முழுவதையும் வழங்குவதாக ஆலை நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால் இதுவரை பணம் வழங்கப்படவில்லை.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் நிலுவைத்தொகையை வட்டியுடன் சேர்த்து உடனடியாக வழங்கக்கோரி தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் ரத்தினவேலு, மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சில விவசாயிகள் கைகளில் கரும்புகளை ஏந்தி நின்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வேலுமயில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கணபதி, விவசாயிகள் பழனிச்சாமி, அந்தோணி, ஜெயபிரகாஷ், பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story