வாய்க்கால் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டவை: ஏரலில் 40 வீடுகள் இடிப்பு பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு


வாய்க்கால் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டவை: ஏரலில் 40 வீடுகள் இடிப்பு பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Oct 2020 6:52 PM GMT (Updated: 9 Oct 2020 6:52 PM GMT)

ஏரலில் வாய்க்கால் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 40 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

ஏரல்,

ஏரலை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதையடுத்து ஏரல் பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தின் மாடியில் தாலுகா அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து ஏரல் வடகால் வாய்க்கால் பாலம் வழியாக காமராஜநல்லூர் செல்லும் வழியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் 17 சென்ட் நிலத்தில் புதிய தாலுகா அலுவலகம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த நிலம் வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு வீடுகள்

இதற்கிடையே, ஏரலில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட உள்ள இடத்துக்கு செல்லும் வழியில், வாய்க்கால் கரையில் சிலர் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி, பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். அங்கு மொத்தம் 40 வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. எனவே, அங்கு வசித்தவர்களை காலி செய்யுமாறு நோட்டீசு வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் மாற்று இடத்தில் வசிப்பதற்கு இலவச வீட்டுமனை பட்டாவும் வழங்கப்பட்டது.

அதன்படி அங்கு வசித்தவர்களில் 20 பேருக்கு நட்டாத்தி பஞ்சாயத்திலும், 8 பேருக்கு சிவகளை பஞ்சாயத்திலும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தொடர்ந்து நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் வசித்த சிலர் தங்களது வீடுகளை காலி செய்து, நட்டாத்தி பஞ்சாயத்தில் வழங்கப்பட்ட இடத்தில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.

சாலைமறியல்

இந்த நிலையில் நேற்று காலையில் ஏரலில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, 2 பொக்லைன் எந்திரங்களுடன் அதிகாரிகள் வந்தனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்த சிலரும் தங்களது வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்து கொண்டு காலி செய்தனர்.

அப்போது அவர்கள் தங்களுக்கு சிவகளைக்கு பதிலாக நட்டாத்தி பஞ்சாயத்திலேயே இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வீட்டுமனை பட்டா வழங்காமல் விடுபட்டவர்களுக்கும் உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அங்கு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

40 வீடுகள் இடிப்பு

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, ஏரல் தாசில்தார் இசக்கிராஜா, ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், அங்கு வசித்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன், அங்குள்ள 40 வீடுகளும் பொக்லைன் எந்திரங்களால் இடித்து அகற்றப்பட்டன. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Next Story