300 ஆசிரியர்களுக்கும் கொரோனா அரசு பள்ளிக்கு சென்று படித்து வந்த 27 மாணவர்களுக்கு வைரஸ் தொற்று


300 ஆசிரியர்களுக்கும் கொரோனா அரசு பள்ளிக்கு சென்று படித்து வந்த 27 மாணவர்களுக்கு வைரஸ் தொற்று
x
தினத்தந்தி 10 Oct 2020 3:11 AM IST (Updated: 10 Oct 2020 3:11 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 300 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு சென்று பாடம் படித்து வந்த 27 மாணவர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலபுரகி,

கொரோனா பரவல் காரணமாக கர்நாடகம் உள்பட இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில் 4 மாதங்கள் ஆகியும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி- கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆன்-லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. குக்கிராமங்களில் இணையதள சேவை, செல்போன் உள்ளிட்ட சேவைகள் கிடைக்காமல் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இவர்களின் நலனை கருத்தில் கொண்டு வித்யாகாம திட்டத்தை கர்நாடக பள்ளி கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் பள்ளி அருகில் வசித்து வரும் குழந்தைகள் பள்ளிக்கு சென்று பாடம் கற்றுக்கொள்ளலாம். அதாவது 5 குழந்தைகள் வீதம் ஷிப்டு முறையில் தான் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

4 மாணவர்களுக்கு கொரோனா

அதுபோல் கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகா மஷால் கிராமத்தில் வித்யாகாம திட்டத்தின் கீழ் அந்த கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பள்ளியில் வைத்து பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது. அந்த பள்ளியில் 250 பேர் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கல்வி கற்றுக் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அவர் அங்குள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைதொடர்ந்து அவர் வகுப்பு எடுத்து வந்த 250 மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை நடத்தினர். இதில் 4 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

20 பேரின் பரிசோதனை முடிவு

அந்த 4 மாணவர்களும் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 20 மாணவர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வர வேண்டியதுள்ளது. மற்ற மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

அதுபோல் பெலகாவி மாவட்டத்தில் வித்யாகாம திட்டத்தின் கீழ் பள்ளிக்கு சென்று படித்து வந்த 23 மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அத்துடன் மாநிலம் முழுவதும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என 300 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் வருகிற 15-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் என்றும், இதுபற்றி அந்த மாநிலங்களே முடிவு செய்யலாம் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மத்திய அரசு அறிவித்தது. இதுதொடர்பாக கர்நாடக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பள்ளிக்கு சென்று வந்த 27 மாணவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட சம்பவம் கலபுரகி மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

ஏனெனில் அரசு உத்தரவை மீறி அதிக மாணவர்களுக்கு பள்ளியில் வைத்து வித்யாகாம திட்டத்தின் கீழ் பாடம் கற்று வந்ததும், இந்த நிலையில் மாணவர்கள் 27 பேருக்கும், 300 ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வித்யாகாம திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து, அவர்களது உயிருடன் கர்நாடக அரசு விளையாடி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக பள்ளிக் கல்வித் துறை மந்திரி, அப்சல்புரா தாலுகா கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அவர்கள் இந்த விவகாரம் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story