அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தவிர்த்து பிற நோய்க்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு அமைச்சர் தகவல்


அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தவிர்த்து பிற நோய்க்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 10 Oct 2020 4:00 AM IST (Updated: 10 Oct 2020 4:00 AM IST)
t-max-icont-min-icon

புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தவிர்த்து பிற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 6 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 371 பேருக்கு தொற்று உறுதியானது. 282 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 2 பேர் இறந்துள்ளனர்.

மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 25 ஆயிரத்து 18 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு லட்சத்து 598 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. 30 ஆயிரத்து 904 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்களில் 4 ஆயிரத்து 803 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

1,693 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 110 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 25 ஆயிரத்து 543 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 558 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிற நோய்களுக்கு சிகிச்சை

புதுவையில் தற்போது உயிரிழப்பு குறைந்துள்ளது. 82.69 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்லும் பிற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே அரசு ஆஸ்பத்திரிகளிலும் பிற நோய்களுக்கு முழுமையான சிகிச்சை அளிப்பது தொடர்பாக வருகிற திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பேச உள்ளோம்.

வீடுகளில் இருந்து சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் டாக்டர்களை நியமிப்பது தொடர்பாகவும் பேச உள்ளோம்.

ஊக்கத்தொகை

மாகியில் தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த வாரம் நானும் முதல்-அமைச்சரும் மாகி செல்ல உள்ளோம்.

பிற மாநிலங்களில் கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு தகுந்தவாறு நம்மிடம் நிதிநிலை இல்லை. எனவே அவர்களுக்கு நவம்பர்-1 ந்தேதியோ, ஜனவரி மாதத்திலோ சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்பின் நிதி நிலை சரியானால் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story