முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 13-ந்தேதி தூத்துக்குடி வருகை அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 13-ந்தேதி தூத்துக்குடி வருகை அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
x
தினத்தந்தி 9 Oct 2020 11:53 PM GMT (Updated: 9 Oct 2020 11:53 PM GMT)

கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 13-ந்தேதி வருகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தூத்துக்குடிக்கு விமானத்தில் வருகிறார். அவருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க., தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

ஆய்வு

அங்கு வரவேற்புக்கு பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை மைய கட்டிடத்தை திறந்து வைத்து, அங்குள்ள கதிர்வீச்சு சிகிச்சை கருவியை இயக்கி வைத்து தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார். அங்கு மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசு திட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளையும் ஆய்வு செய்கிறார்.

உற்சாக வரவேற்பு அளிக்க...

தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம், கோவில்பட்டி பயணியர் விடுதியில் நாளை (அதாவது இன்று) காலை 10 மணிக்கு எனது (அமைச்சர் கடம்பூர் ராஜூ) தலைமையில் நடக்கிறது.

தொடர்ந்து மாலை 4 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் நானும் (அமைச்சர் கடம்பூர் ராஜூ), அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அறிக்கை

இதுதொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடிக்கு வருகை தரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில், தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டங்களில் இந்நாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, வட்ட, வார்டு நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story