தென்காசியில் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த உறவினர்கள் உள்பட 3 பேர் கைது
தென்காசியில் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த உறவினர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 126 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
தென்காசி,
தென்காசி-நெல்லை மெயின் ரோடு சம்பா தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால். தொழிலதிபரான இவர் தென்காசி, சென்னை, கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் மர வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் 7-ந் தேதி சென்னை சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டில் மனைவி விஜயலட்சுமி மட்டும் தனியாக இருந்தார்.
இதனை நோட்டமிட்ட 2 மர்மநபர்கள் நைசாக ஜெயபாலின் வீட்டுக்குள் புகுந்து, விஜயலட்சுமியை ‘செல்லோ’ டேப் மூலம் கட்டிப் போட்டு விட்டு, வீட்டில் இருந்த 126 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
மர்ம நபர்கள் தப்பிச் சென்ற காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாதவன், மாரிமுத்து உள்ளிட்ட போலீசார் அடங்கிய 4 தனிப்படைகள் அமைத்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஜெயபாலின் உறவினர்களான தென்காசி அருகே மேல மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த திருமலைமுத்து மகன் மணிகண்டன் (வயது 27), வேம்பு மகன் ரமேஷ் (27) மற்றும் மேல கடையநல்லூரைச் சேர்ந்த நாராயணராஜ் மகன் சுரேஷ் (31) ஆகிய 3 பேரும் சேர்ந்து ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 126 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
கைதான மணிகண்டன், சென்னையில் ஜெயபாலுக்கு சொந்தமான மரக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். பின்னர் அவர் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இதற்கிடையே மணிகண்டனின் தந்தை திருமலைமுத்து தனது வீட்டு பத்திரத்தை ஜெயபாலிடம் அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன் வாங்கி இருந்தார். பின்னர் அவர், ரூ.3 லட்சத்தை ஜெயபாலிடம் திருப்பி கொடுத்து விட்டார். ஆனால் அந்த பத்திரத்தை ஜெயபால் தொலைத்ததாக கூறி, திருமலைமுத்துவுக்கு திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், ஜெயபாலின் வீட்டில் கொள்ளை அடித்துச் சென்று, தனியாக தொழில் செய்யலாம் என்று கருதி, தன்னுடைய உறவினரான ரமேஷ், நண்பரான சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
கொள்ளை சம்பவம் நிகழ்ந்தபோது, ஜெயபால் தனது வீட்டில் இருந்த 100 பவுன் நகைகள் கொள்ளை போனதாக போலீசாரிடம் தெரிவித்து இருந்தார். ஆனால் ஜெயபால் வீட்டில் இருந்த 126 பவுன் நகைகளை மணிகண்டன் கூட்டாளிகளுடன் கொள்ளையடித்து சென்றுள்ளார். அவை அனைத்தையும் போலீசார் மீட்டனர்.
Related Tags :
Next Story