கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தோட்டங்களில் பச்சை தேயிலை திருடுவது அதிகரிப்பு: விவசாயிகள் கவலை
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் பச்சை தேயிலையை திருடுவது அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் தேயிலை விவசாயத்தை நம்பி உள்ளனர். தேயிலை தோட்டங்களில் விளையும் பச்சை தேயிலையை தினமும் அறுவடை செய்து, அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் கனமழையால் தேயிலை விளைச்சல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூளுக்கு மவுசு அதிகரித்தது. மேலும் விலை உயர்ந்தது. பல ஆண்டுகளாக விலை கிடைக்காமல் தவித்த விவசாயிகள் விலை ஏற்றத்தால் ஆறுதல் அடைந்து உள்ளனர்.
ஆனால் பச்சை தேயிலை கிலோ ரூ.28 முதல் ரூ.30 வரை விற்பனையாவதால் அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்களில் இரவு நேரங்களில் பச்சை தேயிலை திருடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக்கழகம் மற்றும் தனியார் தோட்டங்களில் பச்சைதேயிலையை திருடும் கும்பல் தொடர்ந்து கைவரிசையை காட்டி வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள் என வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால் விவசாயிகள் இரவில் தேயிலை தோட்டங்களை பாதுகாக்க முடியாமல் புலம்பி வருகின்றனர். ஆனால் வனவிலங்குகளின் அச்சுறுத்தல்களையும் மீறி பச்சை தேயிலையை மர்ம கும்பல்கள் திருடி சென்று விடுகிறது. எனவே போலீசார் இரவுநேரத்தில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி, பச்சை தேயிலை திருடும் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தேயிலை விவசாயிகள் கூறியதாவது:-
15 ஆண்டுகளுக்கு பிறகு பச்சை தேயிலைக்கு நியாயமான விலை கிடைத்துள்ளது. கடந்த காலங்களில் விலை கிடைக்காததால் பச்சை தேயிலை பறிப்பதற்கு கூட முடியாமல் இருந்தது. ஒவ்வொரு காலகட்டங்களில் விலை அதிகமாக உள்ள விளை பொருட்களை இரவில் மர்ம கும்பல் திருடிச் சென்று விடுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறுமிளகு, ஏலக்காய் திருட்டு நடைபெற்று வந்த நிலையில் தற்போது பச்சைத் தேயிலையை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story