திருச்சியில் பயங்கரம்: 1 பவுன் நகைக்காக மூதாட்டி படுகொலை


திருச்சியில் பயங்கரம்: 1 பவுன் நகைக்காக மூதாட்டி படுகொலை
x
தினத்தந்தி 11 Oct 2020 10:20 PM GMT (Updated: 11 Oct 2020 10:20 PM GMT)

திருச்சியில் 1 பவுன் நகைக்காக மூதாட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

திருச்சி, 

திருச்சியில் 1 பவுன் நகைக்காக மூதாட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருச்சி சங்கிலியாண்டபுரம் அன்பு நகர் நாகம்மை வீதியைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி ஆனந்தி (வயது 78). இவர்களுக்கு குமாரவேல் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். எலக்ட்ரீசியன் காண்டிராக்டராக வேலை பார்த்து வரும் குமாரவேல் அதே பகுதியில் மற்றொரு வீட்டில் வசித்து வருகிறார். விஜயலட்சுமி செந்தண்ணீர்புரத்தில் வசித்து வருகிறார்.

ஆனந்தி மட்டும் அவர்களுடைய பூர்வீக வீட்டில் தனியாக வசித்து வந்தார். தினமும் அவரது மகனும், மகளும் சென்று தாய் ஆனந்தியை கவனித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை குமாரவேலு வழக்கம்போல் தாயாரை பார்க்க சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன் இருந்த செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சினார். குழாயில் தண்ணீர் வராததால் மோட்டாரை போடுவதற்காக வீட்டினுள் சென்றார்.

அங்கு ஆனந்தி கை கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணியை வைத்து அமுக்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் காதில் அணிந்திருந்த 6 கிராம் தங்கத்தோடு, 2 கிராம் மூக்குத்தி ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குமாரவேல் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி ஆனந்தியின் கை, கால் கட்டுக்களை அவிழ்த்து விட்டு அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே அவர்கள் வந்து பார்த்துவிட்டு பாலக்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் உதவி கமிஷனர் ரவிஅபிராம், பாலக்கரை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகவேல் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் ஆனந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் மர்மநபர்கள் அவரது வாயில் துணியை வைத்து அமுக்கியதில் அவர் மூச்சு திணறி இறந்து இருக்கக்கூடும் என போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், கொலை செய்யப்பட்ட ஆனந்தியின் வீட்டு அருகே முட்செடிகள் அதிகம் வளர்ந்து இருந்தது. சில நாட்களுக்கு முன்புதான் அவற்றை அவரது மகன் குமாரவேல் சுத்தம் செய்தார். மேலும், இந்த பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் அவ்வப்போது சில நபர்கள் மது குடிப்பது, சீட்டு விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், இரவு நேரம் ஆகிவிட்டால் கும்பல், கும்பலாக வந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு சமீபகாலமாக திருச்சியில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆகவே போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி இதுபோன்ற கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story