கர்நாடகத்தில் பலத்த மழைக்கு தாய்-மகள் உள்பட 6 பேர் பலி 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை


கர்நாடகத்தில் பலத்த மழைக்கு தாய்-மகள் உள்பட 6 பேர் பலி 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 Oct 2020 10:32 PM GMT (Updated: 11 Oct 2020 10:32 PM GMT)

வங்கக்கடலில் குறைந்த அழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் கர்நாடகத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழைக்கு தாய்-மகள் உள்பட ஒரே நாளில் 6 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே 12 மாவட்டங் களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

கர்நாடகத்தில் பலத்த மழை

அதாவது பெங்களூரு, கடலோர மாவட்டங்கள், வடகர்நாடக மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று காலையில் இருந்தே மழை பெய்ய தொடங்கியது. இரவு வரை மழை பெய்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

பெங்களூரு தவிர தட்சிண கன்னடா, பல்லாரி, கதக், பாகல்கோட்டை, சித்ரதுர்கா, யாதிகரி, கலபுரகி, விஜயாப்புரா, உத்தரகன்னடா, ஹாவேரி, பீதர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அந்த மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றும் வீசியது. நேற்றும் அந்த மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில், கர்நாடகத்தில் பெய்த கனமழைக்கு 6 பேர் பலியான பரிதாபம் நடந்துள்ளது.

தாய், மகள் சாவு

அதாவது விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேவாடி அருகே கடகோலா கிராமத்தை சேர்ந்தவர் யங்கப்பா, விவசாயி. இவரது மனைவி மகாதேவி (வயது 40). இவர்களது மகள் சோனி (12). நேற்று முன்தினம் மாலையில் யங்கப்பா, அவரது மனைவி, மகள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் 3 பேரும் தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டனர். வரும் வழியில் தொடர்ந்து மழை பெய்ததால் மரத்திற்கு அடியில் 3 பேரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது 3 பேரையும் மின்னல் தாக்கியது.

இதனால் சம்பவ இடத்திலேயே மகாதேவி, அவரது மகள் சோனி பரிதாபமாக இறந்து விட்டனர். யங்கப்பா பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவர், அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பசவனபாகேவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விவசாயி பலி

இதுபோல, சித்ரதுர்கா மாவட்டம் சித்தாபுரா கிராமத்தில் மின்னல் தாக்கி விவசாயியான காலப்பா (49) என்பவரும், தார்வார் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் சரஸ்வதி பட்டீல் என்பவரும் இறந்து விட்டார்கள். சித்ரதுர்கா டவுனில் மட்டும் நேற்று முன்தினம் 145 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கியிலும் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று அதிகாலை வரை விடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மஸ்கி அணையில் இருந்து நேற்று காலையில் அதிகப்படியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது.

இதனை கவனிக்காமல் மஸ்கி அருகே உள்ள ஆற்றுக்கு சென்றிருந்த ஜலீல் என்பவர் சிக்கி கொண்டார். ஆற்றின் நடுவே சிக்கி கொண்ட அவர், கரைக்கு வர முடியாமல் பரிதவித்தார். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து கிரேன் வாகனம் மூலமாக ஜலீலை மீட்டார்கள். அதே நேரத்தில் சென்னபசவா (38) என்பவரையும் மீட்க தீயணைப்பு படைவீரர்கள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை மீட்க தீயணைப்பு படைவீரர்கள் முயன்றும் பலன் அளிக்கவில்லை. தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சென்னபசவா உயிர் இழந்தது தெரியவந்துள்ளது.

டிரைவர்அடித்து செல்லப்பட்டார்

இதுபோல, கொப்பல் மாவட்டம் பைலாபுராவில் உள்ள ஆற்று மேம்பாலத்தை நேற்று காலை டிராக்டர் கடக்க முயன்றது. அப்போது அந்த டிராக்டர் ஆற்றில் கவிழ்ந்தது. இதனால் டிரைவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரின் பெயர் விவரம் தெரியவில்லை. அவரின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டிராக்டரை மட்டும் கனரக வாகனம் மூலமாக கிராம மக்கள் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர்.

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. சித்ரதுர்கா மாவட்டத்தில் 25 வீடுகள் சேதம் அடைந்து உள்ளதுடன், 25-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. விவசாய பயிர்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. பாகல்கோட்டை மாவட்டம் கொப்பா-கோட்டூரில் மேம்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

12 மாவட்டங்களில்...

இந்த நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உடுப்பி, உத்தரகன்னடா, தட்சிண கன்னடா, தார்வார், கதக், ஹாவேரி, பீதர், யாதகிரி, கொப்பல், கலபுரகி, கொப்பல், விஜயாப்புரா ஆகிய 12 மாவட்டங்களில் வருகிற 14-ந் தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழைக்கு கடந்த 24 மணி நேரத்தில் தாய், மகள் உள்பட 6 பேர் பலியாகி உள்ளனர். பல வீடுகள் நீரில் மூழ்கி உள்ளதால், கனமழை பெய்து வரும் மாவட்டங்களில் மீட்பு பணிகளை முடுக்கி விடும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story