கடற்கரை சாலையில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த சுற்றுலா பயணிகள் போலீசார் அபராதம் விதித்தனர்


கடற்கரை சாலையில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த சுற்றுலா பயணிகள் போலீசார் அபராதம் விதித்தனர்
x
தினத்தந்தி 11 Oct 2020 10:48 PM GMT (Updated: 11 Oct 2020 10:48 PM GMT)

கடற்கரை சாலையில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதுவையின் முக்கிய சுற்றிலா இடங்களான கடற்கரை சாலை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகதிறந்து விடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து புதுவைக்கு தற்போது வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். புதுவையில் நேற்று மிதமான வானிலை நிலவியது. காலை முதல் கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தலைமை செயலகம் எதிரே உள்ள மணல் பரப்பில் சிலர் குடும்பத்துடன் கடலில் இறங்கி அலைகளில் கால்களை நனைத்து மகிழ்ந்தனர். அவர்களில் சிலர் முககவசம் அணியாமல் இருந்தனர். அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், முககவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்தனர். மேலும் ஒலிப்பெருக்கி மூலம் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்குமாறு போலீசார் எச்சரிக்கை செய்தனர்.

சண்டே மார்க்கெட்

நோணாங்குப்பம் படகு குழாமில் மக்கள் கூட்டத்தை காண முடிந்தது. சுற்றுலா பயணிகள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி படகு சவாரி செய்தனர். அவர்கள் பாரடைஸ் பீச்சுக்கு சென்று கடலில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுவை காந்திவீதியில் அரசின் தடை உத்தரவை மீறி நேற்று சண்டே மார்க்கெட் செயல்பட்டது. இதில் உள்ளூர் வியாபாரிகள் கடைகள் அமைத்திருந்தனர். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். இதனால் காந்திவீதியில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

இறைச்சி கடைகளில் கூட்டம்

இதேபோல் நெல்லித்தோப்பு மார்க்கெட், புதிய பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட், உழவர்சந்தை உள்ளிட்ட இடங்களில் வழக்கத்தை விட நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு காய்கறி, பழங்களை அவர்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கிச் சென்றதை காண முடிந்தது. ஒருசில பகுதியில் மீன், கோழி, ஆட்டிறைச்சி கடைகளில் கூட்டம் அதிகம் இருந்தது.

Next Story