புதிதாக 320 பேருக்கு தொற்று: கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி 336 பேர் குணமடைந்தனர்


புதிதாக 320 பேருக்கு தொற்று: கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி 336 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 12 Oct 2020 4:26 AM IST (Updated: 12 Oct 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் நேற்று புதிதாக 320 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும் 4 பேர் பலியாகினர். 336 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் மத்திய நிபுணர்கள் குழு அறிவுறுத்தலின்படி நாள்தோறும் அதிக பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 320 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ஒரே நாளில் 336 பேர் குணமடைந்து உள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று கொரோனா பாதிப்பை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 858 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 583 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது. 31 ஆயிரத்து 549 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களில் 4,695 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,662 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3,033 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 26,291 பேர் குணமடைந்துள்ளனர்.

4 பேர் உயிரிழப்பு

புதுவையில் இதுவரை 563 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 468 பேர் புதுச்சேரியையும், 49 பேர் காரைக்காலையும், 42 பேர் ஏனாமையும், 4 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தட்டாஞ்சாவடி காமராஜ் சாலை பகுதியை சேர்ந்த 72 வயது முதியவரும், லப்போர்த் வீதியை சேர்ந்த 63 வயது முதியவரும் உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த திருபுவனை பேங்க் வீதியை சேர்ந்த 59 வயது ஆணும், புதுவை முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 74 வயது முதியவரும் உயிரிழந்துள்ளனர்.

புதுவையில் உயிரிழப்பு 1.78 சதவீதமாகவும், குணமடைவது 83.33 சதவீதமாகவும் உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story